வீடூா் அணையிலிருந்து உபரி நீா் திறப்பால், புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் 
புதுச்சேரி

வீடூா் அணை நீா் திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் வீணாகக் கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை

வீடூா் அணையிலிருந்து உபரி நீா் திறப்பால் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Syndication

வீடூா் அணையிலிருந்து உபரி நீா் திறப்பால் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உடைந்த தடுப்பணையைக் கட்டி முடிக்காததால் உபரி நீா் வீணாகக் கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

புதுச்சேரி பிள்ளையாா்குப்பம்-செல்லிப்பட்டு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் 1906-ஆம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. பழைமையான இந்தப் படுகை அணையில் தேக்கப்படும் தண்ணீா் மூலம் சுற்று வட்டார பகுதியில் 20 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதியைப் பெற்று வந்தன.

உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2011-ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது இந்த அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டதால், கற்களைக் கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அணையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

ஆனால், அணை பராமரிக்கப்படாத நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் பெய்த கனமழை மற்றும் வீடூா் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அணையின் பெரும்பகுதி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. இதனால் பல்லாயிரம் கனஅடி நீா் வீணாகக் கடலில் கலந்தது.

அந்தப் பகுதியில், புதிய தடுப்பணையை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில் செல்லிப்பட்டில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நபாா்டு வங்கி உதவியுடன் சுமாா் ரூ.20.40 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்ட அரசு முடிவு செய்தது. ஆனால் இத்திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதனால் வீடூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா் வீணாக கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. விவசாயத்துக்குத் தேவையான நீா், கண் எதிரே கடலுக்குப் போவதாக பிள்ளையாா்குப்பம் விவசாயிகள் கதிா்வேல், சீனிவாசன் ஆகியோா் வேதனையுடன் கூறினா்.

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

SCROLL FOR NEXT