விழுப்புரம்

அரசுப் பள்ளிகளில் சேர  மாணவர்கள் ஆர்வம்

விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கைக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் புதன்கிழமை திரண்டனர்.

DIN

விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கைக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் புதன்கிழமை திரண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து, இந்த கல்வியாண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கையை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன. குறிப்பாக, 6-ஆம் வகுப்பு, பிளஸ் 1 சேர்க்கைக்கு பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர்கள் கூட்டம் திரண்டுள்ளனர்.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 3,600 மாணவிகள் வரை பயில்கின்றனர். இதில், 6-ஆம் வகுப்பில் 227 பேரும், பிளஸ் 1 வகுப்பில் 924 பேரும் கடந்தாண்டு படித்து வந்தனர்.
இதனையடுத்து, இவ்வகுப்புகளுக்கான இந்த கல்வியாண்டு மாணவிகள் சேர்க்கைத் தொடங்கியது.
ஜூன் 5-ஆம் தேதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி பள்ளியில் தொடங்கியது. தொடர்ந்து, புதன்கிழமையும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
இப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு, பிளஸ் 1 சேர்க்கைக்கு, ஆயிரம் மாணவிகள் வரை, பெற்றோர்களுடன் திரண்டு வந்து விண்ணப்பங்களைப் பெற்றனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சுசீலா கூறுகையில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, சேர்க்கையும் தொடங்கி விட்டது. மாணவிகளுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்பட உள்ளது என்றார்.
விண்ணப்பங்களில் கோரப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அடையாள எண் உள்ளிட்டவையுடன் மாணவிகள் சேர்க்கைக்கு ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதர வகுப்புகளுக்கும், காலியாக உள்ள இடங்களில் மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
புதன்கிழமை 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை விண்ணப்பங்கள் விநியோகம் மற்றும் சேர்க்கை நடைபெற்றதால், ஏராளமான மாணவிகளும், பெற்றோர்களும் திரண்டிருந்தனர்.
இப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93 சதவீதமும், பிளஸ் 2 வில் 87.7 சதவீதமும் தேர்ச்சி இருந்ததால் வரவேற்பைப் பெற்று வருகிறது. கணிதம், உயிரியல் பாடங்கள் அடங்கிய அறிவியல் பிரிவையும், கணினி அறிவியல் பிரிவையும் அதிகளவில் விருப்பப் பிரிவாக பலர் கோரியிருந்தனர்.
இதே போல, விழுப்புரம் நகராட்சி ஆண்கள் பள்ளி, பீமநாய்க்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், ஏராளமான மாணவர்கள், மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் திரண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

இன்று 650 விமானங்கள் ரத்து; பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுகிறது: இண்டிகோ சிஇஓ

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT