மரக்காணம் வட்டத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாய முகாமில் 58 பேருக்கு, ரூ.6.66 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 1 முதல் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் 58 பேருக்கு ரூ.6 லட்சத்து 66 ஆயிரத்து 900 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். முகாமில், ஜூன் 1 முதல் 7-ஆம் தேதி வரை 1,032 மனுக்கள் வந்துள்ளன.
இதில், 44 மனுக்கள் ஏற்கப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 988 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இதில், பெரும்பாலான மனுக்கள் பட்டா உள்பிரிவு கோரியே வந்துள்ளன.
நீர்த்தேக்கப் பகுதிகளில் பட்டா மாற்றம் கோரி மனு செய்துள்ளனர். நீர்த்தேக்கப் பகுதிகளில் பட்டா வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், இந்த மனுக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜமாபந்தி முகாமில் பங்கேற்று குறைகள் குறித்த மனுக்களை அளித்து பயன் பெறுமாறும் ஆட்சியர் தெரிவித்தார்.
விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 4 பேருக்கு தலா ரூ.ஒரு லட்சமும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 5 பேருக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500ம், 9 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆணையும், 3 ஆதிதிராவிடர்களுக்கு இலவச தையல் இயந்திரமும், ரூ.10 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடிக்கு சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட வகையில், 58 பேருக்கு ரூ.6.66 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கினர்.
நில அளவை உதவி இயக்குநர் சண்முகம், ஆட்சியர் அலுவலக மேலாளர் பார்த்தசாரதி, வட்டாட்சியர் சீனுவாசன், தனி வட்டாட்சியர்கள் ஜோதிவேல், தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானவேல் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.