விழுப்புரத்தில் அதிமுக ஓ.பி.எஸ். அணி உள்ளாட்சித் தேர்தல் குறித்த செயல் வீரர்கள் கூட்டம், கட்சி வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் வருகிற 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது. இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கிறார். இதற்கான பந்தல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கட்சி வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் வருகிற மே 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர் மோகன் முன்னிலை வகிக்கிறார். விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்கிறார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிவராஜ் நன்றி கூறுகிறார்.
சிறப்பு விருந்தினராக ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பி.எச்.பாண்டியன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், கூட்ட மேடை அமைக்கும் பணிக்காக கால்கோள் நடும் விழா விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. எம்.பி.க்கள் லட்சுமணன், ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் மோகன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் ரகுராமன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் செந்தில்குமார், கண்டமங்கலம் ஒன்றியச் செயலர் ராமதாஸ், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் செங்குட்டுவன், மயிலம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அர்சுனன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட மாணவர் அணிச் செயலர் ராம சரவணன், நகர இலக்கிய அணிச் செயலர் திருப்பதி பாலாஜி, மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலர் சரவணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் புஷ்பா கோதண்டராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.