விழுப்புரம் அருகே போலீஸ் ரோந்து வாகனம் கட்டுப்பாட்டை இழுந்து மின் கம்பத்தில் மோதி, வீட்டின் சுவர் இடிந்து விழந்ததில் பெண் காயமடைந்தார்.
விழுப்புரம் - புதுச்சேரி சாலையில், காவல் துறை சார்பில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இந்த ரோந்து வாகனம் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்று கொண்டிருந்தது. தலைமைக் காவலர் கணபதி வாகனத்தை ஓட்டிச் சென்றார். உதவி ஆய்வாளர் மகேந்திரன் அமர்ந்திருந்தார்.
கோலியனூர் அம்மன் கோயில் அருகே சென்றபோது, திடீரென ரோந்து வாகனம் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில், அந்த மின்கம்பம் சாய்ந்ததில் அருகில் இருந்த கூரை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலாஜி மனைவி அமுதா பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்து வந்த வளவனூர் போலீஸார், காயமடைந்த அமுதாவை மீட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் ரோந்து வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்தது. இருப்பினும், வாகனத்தை ஓட்டிய தலைமைக் காவலர் கணபதி, வாகனத்தில் அமர்ந்திருந்த மகேந்திரன் ஆகியோர் எவ்வித காயமுமின்றி தப்பினர். விபத்து குறித்து வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், துறை ரீதியாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி விளக்கம் கேட்டக்கப்படும் என்றும், ஓட்டுநர் மீது தவறு இருப்பது தெரிய வந்தால் எந்தவித பாகுபாடுமின்றி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.