விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை கடையை பூட்டி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, விழுப்புரம் நகரில் 3 டாஸ்மாக் மதுக் கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்நிலையில், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் மதுக் கடையில் கூட்டம் அலைமோதி வருகிறது. குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்தக் கடை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.
இந்த மதுக் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள், மதுவை வாங்கி அங்கேயே சாலையோரத்தில் அமர்ந்து அருந்திவிட்டு, ஆபாச வார்த்தைகளை பேசி வருகின்றனர். இதனால் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறதாம். எனவே, இந்த மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் கடையில் இருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, கடையைப் பூட்டி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மதுப் பாட்டில்களை இறக்க வந்த லாரியையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு, மதுப் பாட்டில்களை இறக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த விழுப்புரம் நகர போலீஸார், பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.