விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சங்கராபரணி ஆற்றுப்படுகை விவசாயிகள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனு விவரம்: மத்திய அரசு அனுமதி பெற்று கண்டமங்கலத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் அங்காளம்மன் கோயில் அருகே செல்லும் சங்கராபரணி ஆற்றுப்படுகையில் கடந்த 23-ஆம் தேதி ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு உபகரணங்களுடன் ஒரு லாரியில் சிலர் வந்தனர். அவர்கள் ஆழ்துளைக் கிணறு அமைக்க ஆயத்தமாகினர். இதையறிந்த விவசாயிகள் அனைவரும் அங்கு திரண்டு சென்று அந்தப் பணிகளை தடுத்து நிறுத்தினோம்.
இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், அங்கு நேரில் வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது என்றும், உடனடியாக அனைத்து உபகரணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். இல்லையெனில், போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிச்தோம். பின்னர், அவர்கள் அங்கிருந்து உபகரணங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றினால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் அடியோடு பாதிக்கப்படும். விவசாயம் அழித்துபோகும். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். மேலும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேற நேரிடும். இதன் மூலம் எங்களது எதிர்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலும் வராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.