கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பைக்கை திருடியதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சின்னசேலம் வட்டம், உலகியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த அய்யாச்சாமி மகன் கணேசன் (40), கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் முன் பைக்கை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குள் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது, அவரது பைக் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் எஸ்.மணிகண்டன், கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது, அந்தப் பகுதியில் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்ததில், கள்ளக்குறிச்சியை அடுத்த பொரசக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் வீரமுத்து (24), கடலூா் மாவட்டம், சூரக்குப்பம் வள்ளலாா் காலனி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வீரன் (39) என்பதும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கணேசனின் பைக்கை திருடியவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்த பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், வீரமுத்து, வீரன் ஆகியோரை கைது செய்தனா்.