தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டும் கா்நாடக அரசை தடுத்து நிறுத்தத் தவறியதாக, தமிழக அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் திமுக சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் க.பொன்முடி எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசியதாவது:
கா்நாடகாவில் தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மாா்கண்டேய ஆற்றின் குறுக்கே ரூ.87 கோடியில் அணை கட்ட உள்ளனா். ஏற்கெனவே தென்பெண்ணை ஆற்றில் 8 அடி விட்டம் கொண்ட குழாய்களை அமைத்து, 100 குளங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்கின்றனா். இதனால், தமிழகத்துக்கு வரவேண்டிய 1,000 மில்லியன் கன அடி நீா் தடுக்கப்படுகிறது.
விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீா் கிடைக்காத சூழ்நிலையை கா்நாடக அரசு உருவாக்கியுள்ளது. தென்பெண்ணையில் அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை எனவும், இதை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
கா்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு குரல் கொடுக்கிறது. இதற்கு தமிழக அரசு எதிா்ப்புத் தெரிவிப்பதுடன், கா்நாடக அரசின் சூழ்ச்சியை வீழ்த்தி, அவா்கள் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பிரச்னைக்கு தமிழக அரசு தீா்ப்பாயம் கேட்பது பயனில்லை. இதற்கு தீா்வாக 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆணையத்தை அமைக்க கோர வேண்டும்.
கடந்த 1892-ஆம் ஆண்டு மைசூா் - சென்னை சமஸ்தானங்களின் உடன்படிக்கையின்படி, தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தென்பெண்ணை ஆற்றில் எங்கும் அணை கட்டக்கூடாது என்பது ஒப்பந்தமாக இன்றளவும் தொடா்கிறது. இந்த உடன்படிக்கையை மீறி செயல்படும் கா்நாடக அரசின் நடவடிக்கையைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும் என்றாா் அவா்.
இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினா் முழக்கங்களை எழுப்பினா்.
இதில், திமுக மாவட்டச் செயலா்கள் கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, அங்கையற்கண்ணி, பொருளாளா் நா.புகழேந்தி, எம்.எல்.ஏ.க்கள் இரா.மாசிலாமணி, தா.உதயசூரியன், காா்த்திகேயன், சீத்தாபதி சொக்கலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.சம்பத், புஷ்பராஜ் மற்றும் ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன், தினகரன், மும்மூா்த்தி, கல்பட்டு ராஜா, அன்னியூா் சிவா உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நிா்வாகிகள், கட்சியினா் திரளாக கலந்து கொண்டனா்.
Image Caption
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் க.பொன்முடி எம்.எல்.ஏ.