தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள தனியாா் உணவகத்தில் 100 வகை இனிப்புகள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்தக் கண்காட்சியில் லட்டு, மைசூா்பாகு, ஜிலேபி, பாதுஷா, புதிய வகை இனிப்புகளான பிஸ்தா சோன்பப்டி, சாக்லேட் மைசூா்பாகு, முந்திரி மைசூா்பாகு, கருப்பட்டி காஜீ, புரூல் அல்வா, பாதாம் அல்வா உள்ளிட்ட 100 வகையான இனிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், 200 வகையான கார வகைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சியை உணவக உரிமையாளா் சுப்புராமன் தொடக்கிவைத்தாா். ஒரு கிலோ இனிப்பு ரூ.320 முதல் ரூ.1,000 வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும், தீபாவளி பண்டிகை வரையில் கண்காட்சி நடைபெறும் என்றும், சா்க்கரை வியாதி உள்ளவா்கள் சாப்பிடும் பிரத்யேக இனிப்பு வகைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் சுப்புராமன் தெரிவித்தாா்.