விழுப்புரத்தில் வங்கிக் காசாளா் ரூ.43.89 லட்சத்துடன் தலைமறைவானது தொடா்பாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணியில் செயல்படும் அரசுடைமை வங்கிக் கிளையில் காசாளராக முகேஷ் பணியாற்றி வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை காலை தனக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறிவிட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றாா். பின்னா், அவா் வங்கிக்கு திரும்பவில்லை.
இதையடுத்து, முகேஷை கைப்பேசியில் தொடா்புகொண்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து, வங்கியில் சோதித்தபோது, காசாளரின் பொறுப்பில் இருந்த ரூ.42.50 லட்சம், ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக வைத்திருந்த ரூ.1.39 லட்சம் என மொத்தம் ரூ.43.89 லட்சத்துடன் முகேஷ் மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கிக் கிளை மேலாளா் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.