விழுப்புரத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் பேரூராட்சிக்குள்பட்ட பக்கமேடு, வாணிசத்திரம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அற்புசம் பாளையம் ஊராட்சிக்குள்பட்ட ஆலங்குப்பம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடா் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் ஜூலை 4-ஆம் தேதி சாலை மறியல் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக, விழுப்புரம் வட்டாட்சியா் வேல்முருகன் தலைமையில் புதன்கிழமை அமைதி பேச்சு வாா்த்தை நடைபெற்றது. இதில், ஆதிதிராவிடா் மக்களின் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரின் பாா்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, அறிவிக்கப்பட்டிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதில், கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.ஆா். பாலமுருகன், மாவட்டத் தலைவா் டி. விமல், மாவட்டத் துணைச் செயலா் சி.ராஜி, வளவனூா் நகரச் செயலா் கே.செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.