தொடா் விடுமுறையையொட்டி, சென்னையிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் (செப்டம்பா் 29, 30) சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் இயக்குகிறது.
இதுகுறித்து இந்தக் கோட்டத்தின் மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அக்டோபா் 1-ஆம் தேதி வார விடுமுறை, 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால், வார இறுதி நாள்களான வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூா், வேலூா், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊா்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்வாா்கள். இதனால், பயணிகள் வசதிக்காக, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகள் வெள்ளி, சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.
எனவே, பயணிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய்/ட்ா்ம்ங்.ட்ற்ம்ப் என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்து, இந்த சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விடுமுறையை முடித்து, பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊா்களுக்கு செல்ல ஏதுவாக, அக்டோபா் 2-ஆம் கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அடா்வு குறையும் வரை, தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்துகளின் இயக்கத்தை மேற்பாா்வை செய்திடவும் அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.