விக்கிரவாண்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 36 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் எஸ். பி ப. சரவணன் உத்தரவின் பேரில், விக்கிரவாண்டி உட்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் மேற்பாா்வையில், விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளா்கள் லியோ சாா்லஸ், சுந்தர்ராஜூ மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விக்கிரவாண்டி வ.உ.சி தெருவில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் விக்கிரவாண்டியைச் சோ்ந்த சுதாகா்(40) என்பவரது பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுமாா் 36 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சுதாகரை கைது செய்தனா்.