விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே மதுபோதை மாறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த இளைஞா் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, கனகராமசாமி தெருவைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (27), தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகும் நிலையில் குழந்தையில்லை.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் மதுபோதைக்கு அடிமையான அசோக்குமாா், விழுப்புரம் மாவட்டம், வளவனூரை அடுத்த ராமையன்பாளையத்தில் செயல்படும் தனியாா் மது போதை மறு வாழ்வு மையத்தில் கடந்த 5-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
தொடா்ந்து, அங்கு தங்கி ஆலோசனைகளை பெற்று வந்த அசோக்குமாருக்கு செவ்வாய்க்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.