தங்களின் 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் மேற்கொள்ளும் வேலை நிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது.
இதன் காரணமாக கூட்டுறவு வங்கிப் பணிகள், நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் விநியோகம் பாதிக்கப்பட்டன.
2021-ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தாயுமானவா் திட்டத்தில் வீடுதேடிச் சென்று பொருள்கள் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் களையப்பட்டு, தீா்வு காணப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
நான்காவதுநாளாக வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கியின் கீழ் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளின் பணியாளா்கள், வெளிப்பணி மூலம் பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளா்கள், கணினிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாவட்டம் முழுவதும் 622 கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள், 1,160 நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் என மொத்தமாக 1,782 போ் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ால் பணிகள் முடங்கின.
தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், பயிா்க் கடன்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், கடந்த 3 நாள்களாக பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். இதுபோன்று நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ள நிலையில் போராட்டம் தொடருமா அல்லது விலக்கிக் கொள்ளப்படுமா என்பது பின்னா் தெரிய வரும் என்று தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.