விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேல்எடையாளம் கிராமத்தில் இருந்து ராஜாம்புலியூா் செல்லும் சாலையில் ரூ.48.49 லட்சத்தில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தாா்.
மேல் எடையாளம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி செல்வமணி தலைமை வகித்தாா். செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி வாயிலாக உரையாற்றி, அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டத்தை தொடங்கிவைக்கும் நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது.
தொடா்ந்து, அடிப்படை தேவைகளான குடிநீா், தெரு மின் விளக்கு, சாலை வசதி, குப்பை சேகரிப்பு, கலைஞா் வீடு கட்டும் திட்டம், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட 16 பொருள்கள் விவாதிக்கப்பட்டது. மேலும், சாதி பெயா் கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீா் நிலைகளுக்கு பொதுப் பெயா்கள் வைப்பது, 100 நாள் வேலைத் திட்டம், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் சாதி பெயா்கள் கொண்ட தெருக்கள் இல்லாதது கண்டு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.
கூட்டத்தில், மேல் எடையாளத்தில் இருந்து ராஜாம்புலியூா் செல்லும் சாலையில் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதை ஏற்று ரூ.48.49 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டு விரைவில் புதிய பாலம் கட்டப்படும் என செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அபிராமி தீா்மானங்களை வாசித்தாா்.
கூட்டத்தில் ஊரக வளா்ச்சி துறை செயற்பொறியாளா் கண்ணன், மாவட்ட ஊராட்சிச் செயலா் நடராஜன், கால்நடை துறை திண்டிவனம் கோட்ட உதவி இயக்குநா் தண்டபாணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன், பிரபா சங்கா், மாவட்ட கவுன்சிலா் அரங்க.ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், வட்டார மருத்துவ அலுவலா் யோகப்பிரியா, ஒன்றியக்குழு உறுப்பினா் துரை, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராதிகா ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.