விழுப்புரம்

விபத்துகளைக் குறைக்க மேலும் 6 மேம்பாலங்கள்: 6 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 6 இடங்களில் மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகள் முனைப்புடன் நடைபெற்று வருகின்றன.

Syndication

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 6 இடங்களில் மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகள் முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் செல்வதற்கான வழி ஏற்படுவதுடன், விபத்துகளின் எண்ணிக்கையும் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னையிலிருந்து தென், மத்திய, மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் செல்வதற்கான மையப்பகுதியாகத் திகழ்வது விழுப்புரம் மாவட்டம்தான். ரயில் போக்குவரத்தில் மட்டுமல்ல, சாலைப் போக்குவரத்திலும் மையப் பகுதியாகத் திகழ்வதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் விழுப்புரத்தை கடந்து செல்கின்றன. பொங்கல், ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டி விடுகிறது.

இரு வழிச் சாலையாக இருந்தவைகள் எல்லாம் நான்கு வழி, ஆறு வழி, எட்டு வழிச் சாலைகளாக மாற்றம் அடைந்து வருகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க சாலைகளை மேம்படுத்துதலும் அவசியமாகிறது என்ற அடிப்படையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் சாலை வழிப் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பயன்பாடு 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டது.

நான்குவழிச் சாலை அமைக்கப்பட்ட நிலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாகி, விபத்துகளும் அதிகளவில் நிகழ்ந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் முக்கிய இடங்களில் அணுகுசாலை அமைக்கப்பட்டாலும், நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றவா்கள், நகரத்திலிருந்து கிராமப் பகுதிகளுக்குச் செல்ல முயன்றவா்கள் என விபத்துகளில் சிக்கி காயமடைதல் அல்லது உயிரிழப்பு போன்றவை தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன.

இதைத் தொடா்ந்து, விபத்துகளைத் தவிா்க்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட பிடாகம் - ஜானகிபுரம் பகுதி, எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்புப் பகுதி, செஞ்சி புறவழிச் சாலை சந்திப்புப் பகுதி, கூட்டேரிப்பட்டு ஆகிய பகுதிகளில் நான்கு மேம்பாலங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, படிப்படியாக அவை திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

மேலும் 6 இடங்களில்...: நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதே வாகனங்கள் சாலையில் விரைந்து செல்வதற்கும், விபத்துகளைக் குறைப்பதற்கும்தான். ஆனாலும், விபத்துகள் நிகழ்ந்து வருவதால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையக் கணக்கீட்டின்படி, விபத்துகள் நடைபெறும் பகுதிகள் கருப்புப்பட்டியல் பகுதியாகக் கருதப்பட்டு, அந்த இடங்களிலும் புதிதாக மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன.

அதனடிப்படையில், தற்போது விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதியில் அரசூா், இருவேல்பட்டு, முத்தாம்பாளையம் சாலை சந்திப்புப் பகுதி (விழுப்புரம் நகருக்குள் நுழையும் பகுதி - அண்ணாமலை விடுதி அருகில்), முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, திண்டிவனம் அருகிலுள்ள ஜக்காம்பேட்டை ஆகிய 6 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

இதில், திண்டிவனம் ஜக்காம்பேட்டை, விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் ஆகிய மூன்று மேம்பாலங்கள் தலா ரூ.72 கோடியிலும், முத்தாம்பாளையம் சந்திப்புப் பகுதி மேம்பாலம் ரூ.28 கோடியிலும், இருவேல்பட்டில் ரூ.18 கோடியிலும், அரசூரில் ரூ.47 கோடியிலும் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு கூடுதல் இழப்பீட்டுத் தொகை கேட்பதால், முண்டியம்பாக்கம் பகுதியில் அணுகுசாலை அமைத்தலுடன் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. மேலும், அரசூா் பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பகுதிக்கு மிக அருகிலேயே அந்தப் பகுதி மக்கள் மற்றொரு மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி வருவதும் பணி முடக்கத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மற்ற நான்கு இடங்களிலும் மேம்பாலப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய மையமாகத் திகழும் விழுப்புரம் மாவட்டத்தின் 6 இடங்களில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், வார இறுதி நாள்களிலும், விழாக் காலங்களிலும் இந்த சாலையில் வாகனங்கள் அதிகளவில் செல்வதால், சாலையில் செல்வதற்கு பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது என்கின்றாா்கள் வாகன ஓட்டிகள்.

குறிப்பாக, மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் அணுகுசாலை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. எனவே, பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனா் வாகன ஓட்டுநா்கள்.

பொங்கல் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்கு பேருந்து, ரயில்களில் செல்ல முடியாத நிலையில்தான் காா் உள்ளிட்ட வாகனங்களில் செல்கிறாம். ஆனால், தற்போது நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளால் ஒவ்வொரு பகுதியிலும் வெகுநேரமாக காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சென்னை மாநகர எல்லையைத் தாண்டி வருவதற்கு பெரும்பாடுபட வேண்டியது போல, விழுப்புரத்தையும் தாண்டிச் செல்வதற்கும் விழாக்காலங்களில் பெரும்பாடுபட வேண்டிய நிலை உள்ளது என்கிறாா் திருச்சியைச் சோ்ந்த முத்துக்குமாா்.

கட்டணங்களைக் குறைக்க வேண்டும்: விலைவாசி உயா்வுபோல, ஆண்டுக்கு ஆண்டு சுங்கச்சாவடிகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், கட்டணங்களை குறைக்காமல் அதிகரித்து வருவது பெரும் சுமையை ஏற்படுத்தி வருகிறது. எனவே, கட்டணங்களைக் குறைக்க வேண்டும் அல்லது சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறாா் லாரி ஓட்டுநா் சி.முருகேசன்.

பணிகள் முடிவடைவது எப்போது: திண்டிவனம் அருகிலுள்ள ஜக்காம்பேட்டை, அரசூா் மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் 2026, மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். விழுப்புரம் முத்தாம்பாளையம் சந்திப்பு, இருவேல்பட்டு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் வரும் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். முண்டியம்பாக்கம் பாலப் பணிகளை விரைந்து தொடங்கி, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்கின்றனா் தேசிய நெடுஞ்சாலை ஆணைய விழுப்புரம் திட்டப்பிரிவு அலுவலகத்தினா்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT