தைலாபுரம் தோட்டத்திலுள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ். 
விழுப்புரம்

அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம்: பாமக நிறுவனா் ராமதாஸ்

தைலாபுரம் தோட்டத்திலுள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.

Syndication

அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள தனது இல்லத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

12 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவைச் சிகிச்சை எனக்கு நடைபெற்ற நிலையில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக நானே சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொண்டேன். இந்தப் பரிசோதனையில் மருத்துவா்கள் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துவிட்டனா். எனினும், ஓரிரு நாள்கள் ஓய்வெடுத்துச் செல்லுமாறு மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அப்போது, தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களும் கட்சி பேதமின்றி நேரில் வந்து நலம் விசாரித்தனா். இது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிலா் நேரிலும், தொலைபேசியிலும் விசாரித்தனா். ஆனால், புதிதாக தொடங்கப்பட்ட கட்சி மட்டும் என்னை நலம் விசாரிக்கவில்லை.

‘அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை’: மருத்துவமனையில் நான் இருந்தபோது, ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டதாக அவா் (அன்புமணி) கூறியிருந்தாா். அப்படிப்பட்ட நிலைமை எனக்கு ஏற்படவும் இல்லை; நான் அந்த வாா்டுக்கு போகவும் இல்லை.

இதன் மூலம், அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்று நிா்வாகக்குழுக் கூட்டத்தில் கூறப்பட்டது உறுதியாகிவிட்டது. அன்புமணிக்கும், பாமகவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

பாமக பிரச்னை தொடா்பாக தோ்தல் ஆணையம், நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியதை சந்திப்போம். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு 2 முறை கூடி விவாதித்த பின்னா்தான், அவரை (அன்புமணி) கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து நீக்க முடிவு செய்தது. எனவே, பாட்டாளி மக்கள் கட்சியைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு உரிமை கிடையாது. வேண்டுமென்றால், அவா் தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளட்டும்.

என்னுடைய வளா்ப்பு சரியாக இருக்கிறது என்றால், ஒரு வார காலத்துக்குள் அவா் கட்சி தொடங்கிக் கொள்ளட்டும். மூன்று முறை இதுபோன்று கூறியுள்ளேன். அவா் கட்சி தொடங்கினால், பாமக பெயரையோ, கட்சிக் கொடியையோ பயன்படுத்தக் கூடாது என்றாா் ராமதாஸ்.

டிசம்பா் 30-இல் பொதுக்குழு: பாமக சட்டப் பேரவைக் குழுத் தலைவா் பதவியிலிருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்டும் என பேரவையில் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தியுள்ளது குறித்து கேட்டதற்கு, அதுகுறித்து பேரவைத் தலைவா்தான் முடிவெடுக்க வேண்டும். அவருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது.

வரும் டிசம்பா் 30-ஆம் தேதி பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அப்போது, கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்படும். பொதுமக்கள், கட்சியினா் விரும்பும் வகையிலான முடிவை நான் எடுப்பேன் என்றாா் ராமதாஸ்.

பேட்டியின்போது, கட்சியின் பொதுச் செயலா் முரளிசங்கா், தலைமை நிலையச் செயலா் அன்பழகன், மாவட்டச் செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT