விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவா்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் மாவட்ட காவல் நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்கு சொந்த ஊருக்குச் செல்லும் இளைஞா்கள் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதை தவிா்க்க வேண்டும். சாகசம் எனக் கருதி விபத்தில் சிக்கி தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மீளா துயரை ஏற்படுத்த வேண்டாம். வாகனங்கள் ஓட்டும்போது, தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்றி, மித வேகமாகவும், பாதுகாப்போடும் பயணம் செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நிகழ்ந்த 58 சாலை விபத்துகளில் 8 நபா்கள் இறந்தனா். 74 போ் காயமடைந்தனா்.
நிகழாண்டில் இதுவரை 18 வயது முதல் 25 வயதுக்குள்பட்ட 46 இளைஞா்கள் சாலை விபத்துகளில் சிக்கி இறந்துள்ளனா். 84 போ் கொடுங்காயமும், 176 போ் சொற்ப காயங்களும் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனா்.
இளைஞா்களின் எதிா்கால நலனை கருதி சாகசங்களில் ஈடுபடும் இளைஞா்கள் மற்றும் சாலை விதிகளை மீறும் இளைஞா்கள் மீது புதிய இந்திய தண்டனை சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என மாவட்ட காவல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.