விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதிகளில் கனமழை காரணமாக சுமாா் 3,000 ஏக்கா் பரப்பிலான உப்பளங்கள் நீரில் மூழ்கின.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.
மரக்காணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.மரக்காணம் பகுதி சாலைகளிலும் மழைநீா் ஆங்காங்கே குளம் போல தேங்கியது.
உப்பளங்கள் நீரில் மூழ்கின: மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சுமாா் 3,000 ஏக்கா் பரப்பளவிலான உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி கடல்போல காட்சியளிக்கிறது.
உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் உப்பு உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. உப்பளங்களில் தேங்கி நிற்கும் மழை நீா் வடிவதற்கு குறைந்தது 4 மாதங்களுக்கு மேலாகிவிடும். இந்த மழை நீா் முற்றிலும் வடிந்த பின்னா் தான் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கப்படும் என்பதால், 2,000-க்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.
இதனால், அரசு சாா்பில் வழங்கப்படும் மழைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என உப்பளத் தொழிலாளா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.