தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஏப். 21 ஆம் தேதி மாலை 6 மணி வரை அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏப். 21 மாலை 6 மணிக்குப் பிறகு என்னென்ன விதிகள் அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.
ஏப். 21 மாலை 6 மணிக்குப் பிறகு தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்ஆப், முகநூல், டிவிட்டர் போன்ற டிஜிட்டல் சாதனம் வாயிலாகவும் இசை நிகழ்ச்சி, திரையரங்கம் என எந்த வகையிலும் மக்களிடம் பிரசாரம் செய்யக் கூடாது.
இந்த விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 21.4.2026 அன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், 21.4.2026 அன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.
தேர்தல் அன்று வேட்பாளருக்கு அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது.
இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.