கோடை காலத்தில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்பத் தாக்குதல்(ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்பு வர வாய்ப்பு அதிகமுள்ளது.
மனித உடலின் சராசரி வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும் (36.1 - 37.8°C). சுற்றுப்புற வெப்ப நிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும் போது உடலில் வியர்வை வெளியேறுவது, அதிக ரத்த ஓட்டத்தினால் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
நீர்ச்சத்து இல்லாதபோது அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைவலி, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம் - அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல், மயக்கம், வலிப்பு, தோல் வறண்டு சூடாக சிவந்து காணப்படுதல், இதயத்துடிப்பு அதிகரிப்பது, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
பொது இடங்களில் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவரை நிழல் பகுதியில் காற்றோட்டமான இடத்தில் அமர்த்தி தண்ணீர் அல்லது ஓஆர்எஸ் கரைசல் வழங்க வேண்டும். ஈரத்துணி கொண்டு உடலைத் துடைக்கலாம்.
பச்சிளம் குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
தினமும் 4 லிட்டா் வரை தண்ணீா் அருந்துவது, இளநீா், மோா், பழச்சாறு அருந்துவது, ஓஆர்எஸ் உப்புச் சா்க்கரை கரைசல் பருகுவது, இலகுவான பருத்தி ஆடைகளை அணிவது, காற்றோட்டமான பகுதிகளில் வசிப்பது - ஆகியவற்றைச் செய்யுங்கள்.
காபி, டீ மற்றும் செயற்கை குளிா்பானங்கள், மதுபானங்களை தவிா்க்க வேண்டும். கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்களில் ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
பகல் 11 - 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெளியில் செல்ல நேர்ந்தால் தண்ணீர், குடை, ஓஆர்எஸ் கரைசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.