திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்! ஏன்?

திமுகவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இணைந்தது பற்றி...

முன்னாள் முதல்வரும் அதிமுகவில் இருந்து விலகியவருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று(பிப். 27) திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர் வேறு கட்சியில் இணைவது இதுவே முதல்முறையாகும்.

தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் மகிழ்ச்சியோடு முழு மனதுடன் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதாகவும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த இயக்கமாக திமுக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சர்வாதிகார ஆணவப்போக்குடன் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி, என்றைக்கும் வெற்றி பெற முடியாத ஒரு சூழ்நிலையை அதிமுகவுக்கு உருவாக்கியிருக்கிறார் என்றும் விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். குறிப்பாக தென் மாவட்டத்தில் இருந்து எந்த தலைவரும் வரக் கூடாது என்பதில் இபிஎஸ் முனைப்பு காட்டி வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என சுயமாக பொறுமையாக சிந்தித்து இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று விளக்கமளித்தார் ஓபிஎஸ்.

சில நாள்களுக்கு முன்னதாக ஒரு பேட்டியில், மீண்டும் அதிமுகவுடன் சேருவீர்களா? என்ற கேள்விக்கு 'மதியாதார் தலைவாசல் மிதியாதே' என்று ஓபிஎஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும், அதிமுகவுடன் சேரத் தயாராக இருப்பதாக ஓபிஎஸ் கூறிவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதற்கு செவி சாய்க்கவில்லை. அதனால் ஓபிஎஸ் இறுதியாக இந்த முடிவை எடுத்திருப்பார் என்றே கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...