அமெரிக்கா-ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்த பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே, மறுபுறம் ஈரானும், அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலில் ஈடுபடுவது மேற்காசிய பதற்றத்தைத் தணிப்பதில் முட்டுக்கட்டை போடுவதாக அமைந்திருக்கிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து, வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக இதுவரை உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
மேற்காசிய பதற்றத்தால் கடந்த மூன்று மாதங்களாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்தை மேலும் 60 நாள்களுக்கு நீட்டிக்கவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அண்மையில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்களின் ஒப்புதலுக்காக அது காத்திருக்கிறது.
பேச்சுவார்த்தையில் வெளிப்படைத்தன்மை இல்லாததும், பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை எப்போதுமே ஈரான் மறுத்துச் சொல்வதுமே அமைதி உடன்பாடு கையொப்பமாகாததன் காரணம்.