நம் நாட்டு காவல் துறை சீர்திருத்தப்பட வேண்டியதின் அவசியத்தைப் பற்றி...
இந்திய குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதைக் காட்டிலும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய போராட்டக்காரர்களை அடக்கிவைத்தல், பிரிட்டிஷ் கம்பெனிகள் இந்தியாவில் நடத்திய வாணிபச் செயல்பாடுகளுக்கு பாதுகாப்பாக இருத்தல், திருட்டுக் குற்றங்கள் குறித்து துப்பு துலக்குதல் மற்றும் திருட்டு நடைபெறாமல் கண்காணித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பிரிட்டிஷ் அரசு 1861-ஆம் ஆண்டில் இந்திய காவல் சட்டத்தை இயற்றியது.
இந்தியா விடுதலை அடைந்த பின்னர், ஜனநாயக முறைப்படி இந்தியாவை நிர்வகிப்பதற்காக 1950-ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்பின்படி, காவல் துறை மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதற்கிணங்க, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு, குற்றப் புலன் விசாரணை போன்றவை அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும், பொதுமக்கள் மீதான காவல் துறையின் அத்துமீறல்களும், காவல் மரணம் (லாக்கப் மரணம்) உள்ளிட்ட காவல் மரணங்களும் நம் நாட்டில் அதிக அளவில் நிகழ்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக ஏழு காவல் மரணங்கள் நம் நாட்டில் நிகழ்கின்றன என்பதை சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
'உலகளாவிய சித்திரவதை குறியீடு-2025'-இன் படி, அதிக அளவில் சித்திரவதை நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றிருப்பதும், நம் நாட்டு காவல் துறை சீர்திருத்தப்பட வேண்டியதின் அவசியத்தை வெளிப்படுத்துகிறது.
ஜனநாயக அமைப்பாக இந்திய காவல் துறை செயல்படும் விதத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அறிவுரைகளை எந்த ஒரு மாநிலமும் முழுமையாகக் செயல்படுத்தவில்லை. குறிப்பாக, மாநில காவல் இயக்குநர் பணி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதலை பல மாநில அரசுகள் கடைப்பிடிக்கவில்லை.
வளர்ச்சியில் முன்னேறிய நாடுகளில் மக்கள் சேவையைப் பிரதானமாகக் கொண்டு காவல் துறை செயல்பட்டு வருகிறது. ஆனால், நம் நாட்டில் காலனிய மனப்பான்மையுடன் செயல்படுகிற காவல் துறையை மாற்றி, ஜனநாயக பண்புகளுடன் செயல்படும் காவல் துறையை ஏற்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாத நிலையில் இருந்து வருகிறது.
காவல் அதிகாரிகள் தங்களின் பணிக்காலத்திலேயே அரசியல் கட்சிகளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு செயல்படுகிற தற்கால நிலையைப் பார்க்கும்போது, காவல் சீர்திருத்தம் நம்நாட்டில் கானல் நீராகி விடுமோ? என்ற ஐயம் எழுகிறது.