எதனால் ‘எத்தனால்’?

அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் "எத்தனால் கலந்த பெட்ரோல்'. இதை உபயோகிப்பதால் இந்தியாவின் பெட்ரோல் இறக்குமதி வெகுவாகக் குறையும் என்று ஒரு புறமும், இதனால் இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்ற பயம் இன்னொரு புறமும் பரவலான விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.

பெட்ரோலில் குறிப்பிட்ட அளவு எத்தனால் கலக்கும் போது அந்த அளவுக்கான பெட்ரோல் தேவை குறைவதுடன், அது உபயோகிக்கப்படும் வாகனங்களின் புகையால் குறைந்த அளவே மாசு ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட, எத்தனாலுக்கு ஒரு மவுசு ஏற்படத் தொடங்கியது.

சர்க்கரை ஆலைகளின் துணை உற்பத்திப் பொருளாகிய மொலாசஸ் என்பதிலிருந்து எத்தனால் தயாரித்து பெட்ரோலுடன் கலந்து உபயோகிப்பது சோதனை அளவில் சாத்தியம் என்று ஆனது. முதன்முதலில், 2003-ஆம் ஆண்டில் எத்தனால் கலந்த பெட்ரோலை உபயோகிப்பது என்பது கொள்கை முடிவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

2025-26-ஆம் ஆண்டுக்குள், 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே இந்தியா முழுவதும் உபயோகத்தில் இருக்க வேண்டும் என்று இலக்கு முடிவு செய்யப்பட்டது. இப்போதைக்கு 10% முதல் 15% வரையிலான எத்தனால் கலப்பு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது என்றாலும் கூட 20% இலக்கு நோக்கிய பயணம் வேகம் அடைந்திருக்கிறது.

இந்தியா இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு சுமார் 30 கோடி லிட்டர் பெட்ரோல் உபயோகிக்கிறது. அதில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் என்றால், ஆறு கோடி லிட்டர் எத்தனால் ஒரு நாளைக்குத் தேவை.

சராசரியாக, ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்கத் தேவையான அளவு கரும்பு உற்பத்திக்கு சுமார் 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவை என்று கணக்கிட்டால், ஆண்டுக்கு ஒரு டிஎம்சி எத்தனால் உற்பத்திக்கு 3,000 முதல் 5,000 டிஎம்சி தண்ணீர் இதற்காக மட்டுமே தேவைப்படும்.

இவ்வளவு தண்ணீர் செலவழித்து எத்தனாலை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக இறக்குமதி செய்தால் என்ன என்ற கேள்வி எழலாம். ஆனால், இதில் விவசாயிகளின் "பணப் பலன்' என்ற முக்கியமான காரணி இருக்கிறது.

உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கரும்பு உற்பத்தி செய்யும் விளைநிலங்களின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் மிகக் கணிசமாக உயர்ந்திருக்கிறது. உத்தர பிரதேசத்தின் ஒப்பீட்டில், மகாராஷ்டிரத்திலும், கர்நாடகத்திலும் நதிநீர் வளம் குறைவே.

இருந்தும், கரும்பு உற்பத்தி அங்கே அதிகரிப்பதில், அந்த மாநிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது.

ஆனால், கரும்பு உற்பத்தி விளைநிலப் பரப்பை 35 சதவீதம் அதிகரித்திருக்கும் கர்நாடக மாநிலத்தில் நிலத்தடி நீர் குறைந்தால், தமிழகத்துக்கு வரும் காவிரியின் நீரளவு கணிசமாகக் குறையும் என்பது சிந்திக்கத்தக்க ஒன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...