சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு புதுச்சேரி பிரசாரத்தை முடித்துக் கொண்டு, தமிழக முதல்வர் திருவெண்காட்டில் உள்ள அவரது மாமனார் இல்லத்திற்கு வருகை தந்தார்.
இன்று காலை சீர்காழி தென்பாதி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் இருந்து நடைப்பயிற்சியை தொடங்கினார். அங்கு உள்ள உழவர் சந்தைக்கு மு. க. ஸ்டாலின் சென்று, காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் விற்பனை குறித்தும் அவர்களுக்கு உள்ள குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து வழிநெடுகிலும் மக்கள் மு. க .ஸ்டாலின் உடன் சுயபடம் எடுத்தும் கைகுலுக்கியும் மகிழ்ந்தனர். பின்னர், கச்சேரி சாலை அரசு மருத்துவமனை சாலை, விகாரி மேலவீதி, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நிலையம் ஆகிய சாலைகளின் வழியே மக்களை சந்தித்தவாறு நடைப்பயிற்சி செய்தார்.
சீர்காழி அரசு மருத்துவமனை அருகில் கூடியிருந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். நடைப்பயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின் சாலையில் இருந்த தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்தினார்.