தேர்தல் என்பது, மக்களுக்கு நன்மை செய்வதற்காக என்ற எண்ணத்துடன் அரசியல் கட்சிகளின் செயல்பாடு இருந்தால் பதற்றமான தொகுதிகள் என்ற பேச்சே இருக்காது.
வாக்களிக்கும் முன்பாக ஒரு கட்சியின் கொள்கைகள், அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் திறமை, நேர்மை, உழைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்த்துப் போட்டியிடுபவரைவிட நமக்கும், நமது தொகுதிக்கும் எந்த அளவுக்கு வேட்பாளர் உதவிகரமாக இருப்பார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் சேவை செய்பவராகவும், அதற்கு மக்களிடம் எதையும் எதிர்பார்க்காதவராகவும் இருப்பவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்தல் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு நோர்டிக் நாடுகளிடம் நாம் பாடம் கற்க வேண்டும். (நோர்டிக் நாடுகள் என்பது நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து.) இவர்கள் மக்களாட்சிக்கு முன்மாதிரியான நாடுகள்.
நாடுகளில் தேர்தல் என்பது ஓர் ஆரோக்கியமான விளையாட்டுபோல நடைபெறும். வெற்றி பெற்றவர் வெற்றியை பெரிய அளவில் கொண்டாட மாட்டார். தோல்வி அடைந்தவர், அடுத்த முறை நாம் வெற்றி பெறுவோம் என்று பெருந்தன்மையாக அதை எடுத்துக்கொள்வார்.