அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திவரும் போரின் காரணமாக ஹோர்முஸ் நீரிணை கடந்த ஒரு மாதமாக பெரும்பாலும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால், உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும், அதன் மோசமான விளைவுகளையும் நாம் நாள்தோறும் பார்த்தும், அனுபவித்தும் வருகிறோம். இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், பதற்றத்தின் அதிர்வுகளும் எவ்விதப் பாகுபாடுமின்றி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளன.
பாரசீக வளைகுடாவிலிருந்து ஓமன் வளைகுடா வரை சுமார் 167 கி.மீ. தொலைவுக்கு விரிந்துள்ளது ஹோர்முஸ் நீரிணை. அதன் குறுகிய பகுதி 33 கி.மீ. அகலம்தான். இந்த வழித்தடம் மூலம் தினமும் சுமார் 2 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய், பல்வேறு வகை எரிவாயுக்கள் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இப்போதைய தாக்குதல்களின் விளைவு சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. தென் கொரியா தனது எரிசக்தி தேவையில் 97 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது; அதன் பெரும்பகுதி ஹோர்முஸ் வழியாகவே வருகிறது. தென் கொரியாவின் சாம்சங் மற்றும் எஸ்கே ஹைனிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகளாவிய "ரேம்' (கணினியின் குறுகியகால நினைவகம்) உற்பத்தியின் 67 சதவீதத்தையும், உயர்தர கணினி நினைவக கருவிகள் உற்பத்தியின் சுமார் 80 சதவீதத்தையும் தன்வசம் வைத்துள்ளன. இவைதான் சர்வதேச ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) வளர்ச்சியின் அடித்தளம்.
கிழக்குப் பகுதியில் மலாக்கா நீரிணை வழியாக தினமும் சுமார் 1.6 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் போக்குவரத்து உள்ளது. இது உலக வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கு ஆகும். இதன் குறுகிய பகுதி 2 முதல் 3 கி.மீ. அகலம் மட்டுமே கொண்டுள்ளது. இதன் வழியாக ஆண்டுதோறும் 80,000 முதல் 1,00,000 கப்பல்கள் கடந்து செல்கின்றன.
அதுவும் இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் உலகமயமாக்கல் நடவடிக்கையே வேலைவாய்ப்பையும், பணப்புழக்கம், புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளன. இது நாடுகள் பிணைப்பை உருவாக்க வேண்டுமே தவிர, பிணக்குகளை உருவாக்கக் கூடாது என்பதை நாடுகளின் தலைவர்கள் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.உலகமயமாக்கல் உருவாக்கிய வர்த்தக இணைப்பு ஒரு பலவீனம் அல்ல; அது ஒரு பரஸ்பர பிணைப்பு நிலை. ஒரு நாடு உலக கடல் வழிகளை ஒருதலைபட்சமாக கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணம் தவறு. உலகமயமான அமைப்பு முறையில் உள்ள எந்தப் பிரச்னையும் உள்நாட்டு அல்லது இருநாடுகள் சார்ந்த பிரச்னையாக இருக்க முடியாது; அது உலகளாவிய நெருக்கடியாக உருமாறும்.