எந்தவொரு குடியாட்சியும் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்கள் வெகுமக்கள் ஒவ்வொருவரையும் குடிமக்களாக மாற்றிக் காட்ட வேண்டும். இதுதான் வலிமை கொண்ட குடியாட்சி.
கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களை குடிமக்களாகப் பார்க்காமல் வெறும் பயனாளிகளாகவே பார்ப்பது இன்றைய ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகவே தோன்றுகிறது.
மக்களாட்சியில் கட்சிகளின் பங்கு மிகவும் ஆராய்ந்து பார்க்கத்தக்கது. அவை மக்களின் பிரதிநிதிகள் மட்டுமே என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எந்த அமைப்பாக இருந்தாலும் அதில் ஜனநாயகம் இல்லை என்றால் அங்கு சர்வதிகாரம் குடியேறி விடும்.
மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து என்ன வேண்டுமென்றாலும் அரசியல் கட்சிகளால் செய்து கொள்ள முடிகிறது. குடிமக்கள் அதிகாரம் மட்டுமே அரசியல் கட்சிகளை ஒழுங்கமைக்கும் சிறந்த சாதனம்.
இங்கு இரண்டு சட்டங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம். மற்றொன்று சமூகத் தணிக்கை. இவை இரண்டும் மக்களாட்சியில் நமக்குக் கிடைத்துள்ள மகத்தான கருவிகள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
உலகில் பல நாடுகளில் குடிமக்கள் செயல்பாட்டு மையங்கள் தங்களைச் சிறந்த ஆளுமை மையங்களாக மாற்றிக் கொண்டுள்ளன. தேர்தல் என்பது ஒருநாள் ஒருபொழுதில் வாக்களிக்கும் உரிமை மட்டுமல்ல. அது ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிகவும் உயர்ந்த நடவடிக்கை.
தேர்தல் முடிந்தவுடன் குடிமக்களின் பொறுப்பும் முடிந்துவிடுவதில்லை. காலமெல்லாம் ஜனநாயகத்தைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. இந்த நம்பிக்கை ஒளியில்தான் தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன, இந்திய குடிமக்களை நாம் கண்டறிய முடியும்!