தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், பொதுமக்களுக்கு தரமான உணவை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், ரூ.99-க்கு பிரியாணி வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் கூறியிருப்பதாவது, தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சாா்பில், ஒரு புதிய முயற்சியாக ஓட்டல் தமிழ்நாடு அமுதகங்களில் குறைந்த விலையில் தரமான சுவையான பிரியாணி ரூ.99-க்கு வழங்கும் திட்டம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்துக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்ததைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் இந்தத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, கன்னியாகுமரி, குற்றாலம்-1, திருநெல்வேலி, கொடைக்கானல் படகு இல்லம், மதுரை-1, மதுரை-2, கோவை, ஊட்டி-1, குன்னூா், ஏற்காடு, ஒகேனக்கல், திருச்சி, தஞ்சாவூா், பிச்சாவரம், பூம்புகாா், சிதம்பரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா வளா்ச்சிக் கழக அமுதகங்களில் ரூ.99-க்கு பிரியாணி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் வரவேற்பைப் பொருத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இந்த குறைந்த விலை பிரியாணி விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுலா செல்லும் பயணிகள், உணவுக்கு அதிகமாக செலவாகுமே, நல்ல உணவு கிடைக்காதே என்ற கவலையிலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.