மக்கள் பிரச்னைகளை எங்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்பதை தீர்மானிக்கும் புரிதல் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் இருக்க வேண்டும்.
இதை கோட்பாட்டு ரீதியில் மக்கள் பிரச்னைகளைத் திரட்டுவதும், அவற்றுக்குத் தீர்வு காண்பதும் இரட்டைப் பணிகள் என்று விளக்குகின்றனர் அறிஞர்கள்.
ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் இரண்டு பணிகளை சட்டப்பேரவையில் ஆற்ற வேண்டும். காரணம், அவர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காக இயங்கும் மன்ற உறுப்பினர்; இரண்டாவது அவர் ஒரு தொகுதியின் பிரதிநிதி.
சட்டப்பேரவை உறுப்பினர் என்பவர் பொறுப்புமிக்க ஆளுமை மிக்க, திறன் மிக்க செயல்படும் உயர் மனிதர் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இது கோட்பாட்டின்படி உள்ள எதிர்பார்ப்பு.
ஆனால், இன்று அப்படிப்பட்ட மனிதர்கள் அரசியலுக்குள், தேர்தல் அரசியலுக்குள் வர இயலாத நிலையில் வந்தவர்களை எப்படியாவது மக்களுக்கு பணி செய்ய வைக்க வேண்டும்.
முதலில் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் குறைந்தபட்சம் பத்து நபர்கள் விவரம் அறிந்தவர்கள் நம் சட்டப்பேரவை உறுப்பினரை நமக்காக பணியாற்ற வைக்க பொறுப்பேற்க வேண்டும்.
பின்னர், அந்தக் குழு கிராமத்தில், நகரத்தில் உள்ள மக்கள் உணர்ந்த தேவைகளை மக்களுடன் ஆலோசித்துப் பட்டியலிடுங்கள். அதிலுள்ள தேவைகளில் எவையெல்லாம் உள்ளாட்சியால் செய்ய முடியுமோ அவற்றைத் தவிர்த்துவிட்டு மற்றவற்றை நம் சட்டப்பேரவை உறுப்பினருக்கு அனுப்ப வேண்டும்.