கடந்த காலங்களில் 500 அல்லது 600 குடிமைப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட போதெல்லாம் 100-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தமிழ்நாட்டில் இருந்து வெற்றி பெற்று வந்தார்கள். ஆனால், கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வெற்றி விகிதம் இந்தத் தேர்வில் குறைந்து வருகிறது.
தற்போது இந்திய அளவில் ஆயிரம் பணியிடங்களில் 40-க்கும் குறைவான பணியிடங்களே தமிழ்நாட்டுத் தேர்வர்கள் பெற்று வருகின்றனர்.
நேர்முகத் தேர்வுவரை சென்று வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர்களுக்கு பெற்றோரும், அரசும் தொடர்ந்து ஊக்கம் தர வேண்டும்.
குடிமைப் பணித் தேர்வில் வெல்வதே லட்சியம் என்ற உறுதியோடு தேர்வர்கள் பயணத்தைத் தொடர்கின்ற தருணங்களில் பொருளாதார நெருக்கடிகளையும் மனரீதியான அழுத்தங்களையும் எதிர்கொள்கிறார்கள்.
வெற்றி பெற்றவர்களைக் கொண்டாடுகிற அதேவேளையில், இறுதி நிலைவரை சென்று தோல்வியடைந்த தேர்வர்களுக்கு உரிய நம்பிக்கை தந்து உறுதுணையாக இருக்க வேண்டியதும் நமது கடமையாகும்.
மத்திய அரசு ‘பிரதிபா சேது' என்ற திட்டத்தின் மூலம் நேர்முகத் தேர்வு வரை சென்று வெற்றி வாய்ப்பை இழந்த தேர்வர்களுக்கு அவர்களின் விருப்புரிமையின் பேரில் தகுதிக்கேற்ப மத்திய அரசின் பல்வேறு துறைகளில் குருப் ஏ நிலையில் நிரந்தரப் பணி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழ்நாடு அரசு குரூப் 1 தேர்வில் நேர்முகத் தேர்வுவரை சென்ற தேர்வர்கள் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டால் ஏதேனும் அரசு சார்ந்த நிறுவனத்தில் ஒப்பந்தப் பணிகளில் பணிவாய்ப்புப் பெறும் வகையில் புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.