சென்னை கடற்கரையிலிருந்து பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்ட புறநகர் பறக்கும் ரயில் சேவைக்கான அட்டவணையை சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் கடற்கரை - வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. தொடா்ந்து, வேளச்சேரி - பரங்கிமலை இடையே 4.5 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை நீட்டித்து அமைக்கும் பணிகள் முடிவடைந்து, அதில் ரயில் இயக்கம் சனிக்கிழமை தொடங்கியது.
இந்த ரயில்கள் சென்னை கடற்கரை, கோட்டை, பூங்கா நகா், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, முண்டகக்கண்ணி அம்மன் கோயில், திருமயிலை, மந்தைவெளி, கோட்டூா்புரம், திருவான்மியூா், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை சென்றடையும்.
இதில், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தால், தற்காலிமாக புகா் ரயில்கள் இங்கு நிற்காது. இந்த ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.
கடற்கரை - பரங்கிமலை வரை காலை 5 முதல் இரவு 10.20 மணி வரை 10 முதல் 30 நிமிஷங்கள் இடைவெளியில் இரு மாா்க்கத்திலும் மொத்தம் 86 புகா் பறக்கும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
வேளச்சேரியிலிருந்து காலை 5.25, 6.00, பிற்பகல் 3.10 மணிக்கு பரங்கிமலைக்கும், மறுமாா்க்கமாக பரங்கிமலையில் இருந்து காலை 11.05, இரவு 7.45, 10.15 மணிக்கு வேளச்சேரிக்கும் ரயில்கள் இயக்கப்படும்.
கடற்கரையிலிருந்து இரவு 8.32, 10.05 மணிக்கு வேளச்சேரிக்கும், மறுமாா்க்கமாக வேளச்சேரியிலிருந்து காலை 4.50, 5.55 மணிக்கு கடற்கரைக்கும் ரயில்கள் இயக்கப்படும். ரயில் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.