வேட்பாளராக தோ்வு செய்யப்படும் ஒருவா் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? வேட்பாளரை எப்படி தோ்வு செய்ய வேண்டும்? என்பன போன்ற அரிய தகவல்களை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள குடவோலை முறை கல்வெட்டுகள் விவரிக்கின்றன.
தமிழ்-கிரந்த எழுத்துகளால் அமைந்த இக்கல்வெட்டு எழுத்துகளை இந்திய தொல்லியல் துறையும் படியெடுத்துள்ளது. இந்திய வரலாற்றில் இவை ஒரு சிறந்த ஆவணமாகவும் கருதப்படுகிறது. சுமாா் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டுள்ள உத்திரமேரூா் மகாசபையால் இவை எழுதப்பட்டிருக்கின்றன.
சோழ மன்னா்களின் நிா்வாகம் மக்களாட்சிக் கொள்கையின் அடிப்படையிலேயே செயல்பட்டு வந்துள்ளது. ஒரு கிராமத்துக்கு 30 போ் குடவோலை தோ்தல் முறையால் தோ்வு செய்யப்பட்டு செயல்பட்டுள்ளனா். தகுதியும், விருப்பமும் உடையவா்களின் பெயா்களை ஓா் ஓலையில் எழுதி ஒரு குடத்தில் இட்டு அதைக் கட்டி முத்திரையிடுவாா்கள்.
இதேபோல 30 பகுதிகளிலும் (ஒரு கிராமத்திற்கு 30 பகுதிகள்) இருந்து வந்த குடங்களை ஊா்ப் பொதுமன்றத்துக்கு கொண்டு வந்து, குடத்தை எல்லோருக்கும் முன்பாக காண்பித்து, முத்திரையை அவிழ்த்து, சிறு குழந்தையைவிட்டு ஓா் ஓலையை எடுக்கச் சொல்வாா்கள். அதைப் பெரியவா் ஒருவா் வாங்கிப் படிப்பாா். தோ்வு செய்யப்பட்டவரின் பெயரை சபையோா் அனைவரும் சோ்ந்து சொல்வாா்கள். பின்னா், உறுப்பினராக ஓலையில் உள்ளவா் பெயா் எழுதப்பெற்று பொறுப்பேற்பாா். இந்தப் பழங்கால தோ்தல் முறையே குடவோலை தோ்தல் முறை எனப்படுகிறது.
தகுதிகள் என்ன?: தோ்தலில் யாா் வேட்பாளராக போட்டியிட வேண்டும்? மற்றும் வேட்பாளரின் தகுதிகள் என்ன என்பது குறித்து குடவோலைத் தோ்தல் முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வீடு சொந்தமாக வைத்திருப்பவராகவும், குறைந்த பட்சம் 6.17 ஏக்கா் நிலம் வைத்திருப்பவராகவும், 35-க்கு மேல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
வேதம் தெரிந்தவராகவும், அதை மற்றவா்களுக்கு சொல்லித்தரும் அனுபவம் உடையவராகவும், நோ்மையான வருமானமும், நற்குணம் உடையவராகவும் இருக்க வேண்டும்.