ஆனால், இன்று அதே கடல், காலநிலை மாற்றத்தின் காரணமாகப் புதிய கவலையை எழுப்புகிறது. கடல் ஒரே இரவில் கரையை விழுங்கிவிடுவதில்லை. மில்லி மீட்டர்களில் தொடங்கும் மாற்றம், ஆண்டுகள் செல்லச் செல்ல புயல் அலைகள், கடற்கரை அரிப்பு, உப்புநீர் உட்புகுதல் போன்றவற்றுடன் இணைந்து கடலோரத்தின் முகத்தையே மாற்றக்கூடும்.
பூமியின் சராசரி வெப்பநிலை உயரும்போது இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. கிரீன்லாந்து, அன்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளில் பனிப் படலங்களும் பனிப் பாறைகளும் உருகுகின்றன. அதே நேரத்தில் கடல்நீர் வெப்பமடையும்போது அவை விரிவடைகின்றன. இவை இரண்டும் உலகளாவிய கடல் மட்ட உயர்வின் முக்கியக் காரணங்கள்.
ஐபிசிசி மதிப்பீட்டின்படி, 1901 முதல் உலக சராசரி கடல் மட்டம் சுமார் 20 செ.மீ. உயர்ந்துள்ளது. மிக அதிக பசுங்குடில் வாயு உமிழ்வு தொடரும் சூழலில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலக கடல் மட்டம் மேலும் குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என அறிவியல் உலகம் எச்சரிக்கிறது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை நீளும் சுமார் 1,000 கி.மீ. கடற்கரை, மீன்பிடி துறைமுகங்கள், சுற்றுலா, உப்பு உற்பத்தி, கடலோர விவசாயம் என லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
1990 முதல் 2018 வரையிலான காலத்தில் ஆய்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டின் சுமார் 991 கி.மீ. நீள கடற்கரையில் 42.7 சதவீதப் பகுதி பல்வேறு அளவுகளில் கடலரிப்பைச் சந்தித்துள்ளது.
இதற்கான தீர்வு கடலுக்கு எதிராக எல்லா இடங்களிலும் கான்கிரீட் சுவர் எழுப்புவது அல்ல; கடலுடன் இணைந்து வாழும் அறிவியலை வளர்ப்பதே முக்கியம்.செயற்கைக்கோள், ஜிஐஎஸ், தொலை உணர்வு தொழில்நுட்பங்கள் மூலம் கரையோர மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட கடலோர அபாய வரைபடங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
கடலை வெல்ல முடியாது; ஆனால் அதன் மொழியை அறிவியலால் புரிந்துகொண்டு, இயற்கையின் அரண்களைப் பாதுகாத்து, அதன் மாற்றங்களுக்கு ஏற்ப நமது வாழ்விடங்களைத் திட்டமிட முடியும்.