போதைப்பொருள் விற்பனை நம் நாட்டில் கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை நிலவுகிறது.
போதைப் பொருள் விற்பனை வலைப்பின்னலின் முழு விவரங்களை பல நேரங்களில் புலன் விசாரணையில் கண்டறிய முடிவதில்லை.
உலகின் முக்கிய போதைப் பொருள் உற்பத்தி பகுதிகளுக்கு இடையிலும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வழித்தடத்திலும் இந்தியா அமைந்திருக்கிறது.இதனால், போதைப் பொருள் விற்பனை இந்திய மாநிலங்களிடையே பரவிவரும் சூழல் நிலவுகிறது.
போதைப் பொருளை ஒரு நபர் பயன்படுத்துவதால், அவரது உடல் நலன் மற்றும் மன நலன் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அது அவரது குடும்பத்தினர் அனைவரின் வாழ்வைச் சீரழித்து விடுகிறது.இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்குள் குற்றச் செயல் மூலம் ஈட்டப்படும் பணம் நுழைகிற அபாயமும் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சம் பேர் போதைப் பொருள் பழக்கம் உடையவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் கணிசமான சதவீதத்தினர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.
அத்தகைய நபர்களை அடையாளம் கண்டறிந்து, அவர்கள் இயல்பான வாழ்க்கை முறைக்குத் திரும்புவதற்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் எதுவும் பெரிய அளவில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவில்லை.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தாமல், போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பதற்காக மட்டும் எடுக்கப்படும் நடவடிக்கைகள், விழலுக்கு இறைத்த நீராக வீணாகும்.