பெண்களின் கருப்பையில் உள்ள சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதையே 'பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்' (பிசிஓஎஸ்) எனப்படுகிறது.
ஆனால், உண்மையில் பல பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதில்லை. ஆனாலும் அவர்களுக்கு மாதவிடாய், கருத்தரிப்பதில் பிரச்னை இருக்கிறது. இதற்கு காரணம் வளர்சிதை மாற்றக் கோளாறுகள், ஹார்மோன் மாற்றங்கள் ஆகும்.
இந்த பிரச்னைகளையும் குறிக்கும் விதமாக பிசிஓஎஸ் என்ற பெயரை 'பாலிஎண்டோகிரைன் மெட்டபாலிக் ஓவரியன் சிண்ட்ரோம்' (பிஎம்ஓஎஸ்) என்று மருத்துவரீதியாக மாற்றியுள்ளனர்.
பிசிஓஎஸ் என்பது ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறு என்பதைச் சரியாக எடுத்துரைக்கும் பொருட்டு அதற்கு பிஎம்ஓஎஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.
பிஎம்ஓஎஸ் பெயர் மாற்றத்திற்கு இந்தியாவிற்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தியப் பெண்களில் 16% முதல் 18% வரை பிஎம்ஓஎஸ் கோளாறுடன் உள்ளனர். இது உலக சராசரியைவிட மிக அதிகம்.
நவீன வாழ்க்கை முறைதான் இதற்கு முக்கிய பிரச்னையாக உள்ளது. கருத்தரித்தலுக்காகவே மருத்துவர்களை நாடும்போது பிஎம்ஓஎஸ் பிரச்னை உள்ளதைத் தெரிந்துகொண்டுள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது, ஒழுங்கற்ற முறையில் அல்லது சரியான நேரத்திற்கு சாப்பிடாதது, அதிக திரை நேரம், தூக்கமின்மை ஆகியவை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.
பிஎம்ஓஎஸ் என்பது நீர்க்கட்டிகள் போன்ற கருப்பை சார்ந்த பிரச்னைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல்ரீதியான கோளாறைக் குறிக்கிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தீர்வு காண முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.