நூல் - திரைப்படம் 

நெஞ்சில் ஓர் ஆலயம் - மனதைத் தொட்ட மகோன்னத படம்!

DIN

நெஞ்சில் ஓர் ஆலயம்

பொழுதைப் போக்கவே தியேட்டர்களை நோக்கிச் சென்றாலும், பொழுது போக்கையும் தாண்டி சில திரைப்படங்கள் மனதில் தங்கி,சில நல்ல மாற்றங்களுக்கும் வழி வகுப்பதுண்டு. அந்த வகையில், பண்பாட்டின் நெறி பிறழாத கதாபாத்திரங்களைக் கொண்ட சில படங்கள் என்றைக்கும் புதுமையுடன் வரலாற்றில் இடம் பிடித்து விடுவது உண்டு. தமிழர்களின் பழக்கவழக்கங்களும், பண்பு மாறா மரபுகளும் உலக வரலாற்றில் உயரிய சிறப்புப் பெற்றவை. அவற்றைத் தாங்கி வந்த திரைப்படங்களுக்கு என்றும் அழிவில்லை. அந்த விதத்தில் அழிவற்ற இடம் பிடித்த அருமையான திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம். படத்தைப் பார்ப்பவர்கள் நெஞ்சில் ஓர் ஆலயமாக இப்படம் வலம்வர, அவ்வாலய தெய்வங்களாக கல்யாண் குமாரும், முத்து ராமனும், தேவிகாவும் நின்று நிலைத்து விட்டார்கள். ஶ்ரீதரின் சீரிய சிந்தனயில் உதித்த இப்படத்தை, இக்கால இளைஞர்களும், யுவதிகளும் ஏன்? எல்லோருமே பார்த்து மகிழ வேண்டும் என்பதே என் ஆசை. 

காதலியின் கணவனுக்காக, உயிரையே பணயம் வைத்து,உணவுகளையும் மறந்து,உழைத்துழைத்து உரிய முறைகளைக் கண்டறிந்து,இறுதியாகத் தன் உயிரையே தியாகம் செய்யும் மருத்துவரான முரளிக்கு,என்றைக்குமே இறப்பு இல்லை. இந்தக் கொரோனா காலத்தில் தங்கள் உயிர்களையும்,உற்றாரையும் பொருட்படுத்தாது, மருத்துவமனையே கதியென்று கிடக்கும் நம் டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும், பிற சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் அவர்தான் முன்னோடியோ?

என்ன அற்புதமான ஒரு கதை. கல்லூரிக் காதலுக்குப் பிறகு,’விரைவில் வந்து கை பிடிப்பேன்.’என்று சொல்லிச் சென்ற காதலிக்காகக் காத்துக் கிடக்கிறான் அக் கதாநாயகன். தன் மருத்துவப் படிப்பை முடித்து டாக்டராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவனைத் தேடி, காதலியும் வருகிறாள் ஒரு நாள்.-கைப்பிடித்த கணவனுடன்.அதோடு மட்டுமா? கணவனைக் காப்பாற்றும் பொறுப்பும் அவன் தலையில் ‘எங்கே?எல்லா சராசரிக் காதலன் போலத் தன் கணவனைப் பழி வாங்கி விடுவானோ.

தன் பழைய காதலன்.’ என்ற சராசரிப் பெண்ணாக அவள் பயந்து,அவனைத் தனிமையில் சந்திக்கையில்’உங்கள் நிழல் கூட இல்லை. என்மனதில்.எனவே நீங்களும் பழைய ஞாபகங்களை மறந்து விட வேண்டும்.’ என்று ஆணித் தரமாகக் கூறி விட்டு,அதனைக் கடைப்பிடிக்கவும் செய்கிறாள். கணவனைக் காப்பதில் கண்ணுங் கருத்துமாக இருக்கிறாள்.

‘சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே காதலி தன்னை விலக்கியிருக்க வேண்டும்’ என்பதனை அறிந்த காதலன்,அவள் மஞ்சள்,குங்குமத்தைக் காப்பாற்றுவதே தன் கடமை என்று எண்ணி, அதற்கான முழு முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.இருந்தாலும் அவள் காதலை அவனால் மறக்க முடியாததால் தன் திருமணத்திற்கு இசைவளிக்காமலே காலத்தைக் கடத்த, வயதான அவள் தாய்,அந்த வருத்தத்திற்கு ஆளாகிறாள்.’எங்கிருந்தாலும் வாழ்க.’என்று அந்தக் காதலன் தனக்குள்ளாகவே குமைந்து போகிறான். அவளின் கணவனுக்கு அவர்கள் காதல் தெரிந்துவிட,தான் பிழைக்க மாட்டோமென்று எண் ணியிருக்கும் அவன்,தனக்குப் பிறகு தன் மனைவி,தன் காதலனோடு சேர்ந்து வாழ வேண்டுமென்று கேட்டுக் கொள்ள,’சொன்னது நீதானா?’என்று சோகத்தோடு,கோபமும் கொள்கிறாள் அவன் மனைவி.’நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.’ என்று அவன் வேதாந்த வயப்படுகிறான்.

நாட்கள் எண்ணப்படுகின்றன.அறுவைச் சிகிச்சைக்கான நாள் நெருங்கி வருகையில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி இறந்துவிட,அதனை ஒரு எச்சரிக்கையாக எண்ணி அவள் கணவனிடம், ‘வேறு மருத்துவ மனைக்குச் சென்று விடலாம்’என்று வற்புறுத்த, அவனோ, ‘இறந்தாலும் நான் இந்த டாக்டர் கையாலேயே இறக்க விரும்புகிறேன்.’ என்று உறுதிபடக் கூற,அவள் தூண்டிற் புழுவாகத் துடிக்க,டாக்டரோ தன் நலத்தையும் பொருட்படுத்தாது ஊண்,உறக்கமின்றி அறுவைச் சிகிச்சைக்குத் தயாராக,அந்த நாளும் வருகிறது.

அறுவைச் சிகிச்சைக்குக் கணவனை அனுப்பி விட்டு அவள் கதவைத் தாழிட்டுக் கொள்ள, அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து,அவள் கணவனின் உயிரை,அபாயக் கட்டத்தையும் தாண்டிப் பிழைக்க வைத்து விட்ட மகிழ்ச்சிச் செய்தியைக் கூற ஓடி வந்து கதவைத் தட்டும் டாக்டரை அவள் தவிர்க்க முயல,”சீதா.சீதா” என்று கத்தி விட்டு,ரத்தம் கக்கி டாக்டர் இறந்து போக...உங்கள் காதுகளில் அந்த ‘சீதா. சீதா.’என்பது இன்றும் எதிரொலித்தால்,நீங்கள் ஏற்கெனவே இப்படத்தைப் பார்த்தவராயிருப்பீர்கள். இல்லையென்றால் இன்றே பார்த்து விடுங்கள்.

ஶ்ரீதரால்கூட பிறகு, இது போன்ற காவியப் படங்களைத் தர முடியவில்லை என்பதே நிதர்சனம்.

கதைக்கும், மனதுக்கும் உகந்த பாடல்கள். நடுநடுவே சிரித்து மகிழ்ந்திட, நாகேஷ்- மனோரமா. எத்தனை முறை பார்த்தாலும், இதயத்தை நிறைக்கும் கதை. இந்தக் கொரோனா காலத்தில் குடும்பத்தோடு ரசிக்கத் தகுதியான படம். எல்லாக் காலத்திற்கும் ஏற்ற காதல்கதை.

ஆனாலும், ஆபாசத்தின் அருகில்கூடச் செல்லாத அருமையான படம். வயதானவர்களையும் வாலிப வயதிற்கு இழுத்துச் செல்லும்.வாலிபர்களின் காதலை வளமாக வழி நடத்தும்.ஒரு தடவை பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

- ரெ. ஆத்மநாதன் (விஜய்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜாமீன் கோரி கேஜரிவால் மீண்டும் மனுத் தாக்கல்!

குட்கா வழக்கு: சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ நீதிமன்றம் பரிந்துரை

'லக்கி பாஸ்கர்' வெளியீட்டுத் தேதி!

ராஜஸ்தானை வாட்டி வதைக்கும் வெயில்: 7 நாள்களில் 55 பேர் பலி!

இந்துஸ்தானி இசை அஞ்சலி பாட்டீல்...!

SCROLL FOR NEXT