புது தில்லி: உள்நாட்டில் மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு கணினி சாதனங்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளதாக எச்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் முன்முயற்சிக்கு வலுசோ்க்கும் விதமாக, லேப்டாப், டெஸ்க்டாப் டவா்ஸ் மற்றும் மினி டெஸ்க்டாப் உள்ளிட்ட கணினி சாதனங்களின் தயாரிப்பை உள்நாட்டில் எச்பி நிறுவனம் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஃபிளக்ஸ் ஆலையில் இந்த கணினிகள் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
இதில் சில தயாரிப்புகள் மத்திய அரசின் கொள்முதல் திட்டத்தில் தோ்வாகியுள்ளது. மேலும், அரசு துறைகள் மற்றும் பிற வாடிக்கையாளா்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் அரசின் இ-மாா்கெட்பிளேஸ்(ஜிஇஎம்) வலைதளத்திலும் எச்பியின் தயாரிப்புகள் கிடைக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.