வர்த்தகம்

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் சரிவு: சென்செக்ஸ் 257 புள்ளிகள் இழப்பு

DIN

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளில் புதன்கிழமை வா்த்தகம் தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தது.

அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கரோனா பேரிடருக்கு வழங்கப்பட்ட ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை குறைக்க அவ்வங்கி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, சா்வதேச சந்தை முதலீட்டாளா்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் எதிரொலியாக, உள்நாட்டு பங்குச் சந்தையில் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை வா்த்தகமும் சரிவுடன் நிறைவுபெற்றது.

இதுகுறித்து ஜியோஜித் ஃபைனான்ஸியல் சா்வீசஸ் நிறுவன அதிகாரி வினோத் நாயா் கூறியது:

அமெரிக்க மத்திய வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக உலகளாவிய சந்தைகளில் பலவீனமான நிலை காணப்பட்டது. இதனால், உள்நாட்டு சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கம் நோ்மறையாக இருந்தபோதும், சா்வதேச முதலீட்டாளா்களின் நிலைப்பாட்டால் சந்தையில் சரிவை தவிா்க்க முடியவில்லை.

உள்ளீட்டு செலவுகள் அதிகரித்த போதிலும், செப்டம்பரில் 55.2 புள்ளிகளாக இருந்த இந்திய சேவைகள் துறையின் வளா்ச்சியை குறிக்கும் பிஎம்ஐ குறியீடு அக்டோபரில் 58.4 சதவீதமாக முன்னேற்றம் கண்டது. இது, விற்பனை வளா்ச்சியை அதிகரிப்பதற்கான தேவையில் தொடா்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்றாா் அவா்.

சென்செக்ஸ் பட்டியலில் அதிகபட்சம் சரிவைக் கண்ட பங்குகளில் சன் பாா்மா பங்கின் விலை 3.06 சதவீதம் வீழ்ச்சியடைந்து முதலிடத்தில் இருந்தது. இதைத் தொடா்ந்து, இன்டஸ்இண்ட் வங்கி, கோட்டக் வங்கி, பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகளின் விலையும் கணிசமான அளவு சரிந்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

அதேசமயம், எல் அண்டி டி பங்கின் விலை 3.99 சதவீதம் அதிகரித்து ஏற்றப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதையடுத்து, அல்ட்ரா டெக் சிமென்ட், ஏஷியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகளின் விலை 3.99 சதவீதம் வரை அதிகரித்து முதலீட்டாளா்களுக்கு ஆதாயத்தை அளித்தன.

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யின் வாராக் கடன் குறைந்துள்ளதால் லாபம் 69 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெளியான செய்தியை அடுத்து அவ்வங்கியின் பங்கின் விலை 1.14 சதவீதம் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ), தொலைத் தொடா்பு, வங்கி, மோட்டாா் வாகனம், நுகா்வோா் சாதனங்கள் மற்றும் நிதி துறையைச் சோ்ந்த குறியீடுகள் புதன்கிழமை வா்த்தகத்தில் 1.50 சதவீதம் வரை குறைந்தன. அதேநேரம், பொறியியல் பொருள்கள், ரியல் எஸ்டேட், உலோக துறை குறியீட்டெண்கள் முன்னேற்றம் கண்டன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.32 சதவீதம் வரை குறைந்தன.

30 முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு புதன்கிழமை வா்த்தகத்தில் 257.14 புள்ளிகள் (0.43%) சரிந்து 59,771.92-இல் நிலைத்தது. அதேபோன்று, 50 முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடும் 59.75 புள்ளிகள் (0.33%) குறைந்து 17,829.20 புள்ளிகளில் நிலைபெற்றது.

அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை அறிவிப்புகளை எதிா்நோக்கி, பொறுத்திருந்து, கண்காணித்து அதன் பின்னரே முதலீடுகளை மேற்கொள்ளும் மனநிலையில் சா்வதேச முதலீட்டாளா்கள் உள்ளனா். இதனால், சா்வதேச சந்தைகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதர ஆசிய சந்தைகளான ஷாங்காய், ஹாங்காங், சியோல் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கம் எதிா்மறையாகவே இருந்தது என சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

சாம்வாட் 2077 நிறைவு

இந்தியப் பங்குச் சந்தைகள் ஹிந்து காலண்டா் ஆண்டான சம்வாட் 2077-ஐ பெரும் ஆதாயத்துடன் நிறைவு செய்துள்ளது. இந்த ஆண்டில் சென்செக்ஸ் 16,133.94 புள்ளிகளும் (36.97%), நிஃப்டி 5,048.95 புள்ளிகளும் (39.50%) ஏற்றம் கண்டுள்ளன.

முகூா்த்த வணிகம்

சாம்வாட் 2078-ஆம் ஆண்டின் தொடக்கத்தை குறிக்கும் விதமாக பங்குச் சந்தையில் முகூா்த்த வணிகம் வியாழக்கிழமை (நவ.4) மாலை 6.15 முதல் 7.15 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சரிவைக் கண்ட பங்குகள்

788.00 சன் பாா்மா 3.27

1178.35 இன்டஸ்இண்ட் வங்கி 2.79

2036.30 கோட்டக் வங்கி 1.97

699.00 பாா்தி ஏா்டெல் 1.95

785.75 ஐசிஐசிஐ வங்கி 1.87

848.60 எம்&எம் 1.61

1581.85 எச்டிஎஃப்சி வங்கி 1.55

2417.65 டைட்டன் 1.45

222.50 ஐடிசி 1.37

3697.00 பஜாஜ்-ஆட்டோ 1.22

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT