இந்தியாவின் வெட்டி, மெருகூட்டப்பட்ட வைர ஏற்றுமதி சந்தைகளில் தேவை மிகவும் குறைவாக இருப்பதால், நடப்பு நிதியாண்டில் அவற்றின் ஏற்றுமதி 22 சதவீதம் வரை சரிவைக் காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் வெட்டி மெருகூட்டப்பட்ட வைர ஏற்றுமதி தொடா்ந்து சரிவைக் கண்டு வருகிறது.கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் அதே அரையாண்டோடு ஒப்பிடுகையில் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஏற்றுமதி 33 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும்தான் அதிக அளவில் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரங்களை இறக்குமதி செய்து வருகின்றன.அந்த இரு சந்தைகளிலும் தேவை வெகுவாகக் குறைந்துள்ளதால் அவற்றின் ஏற்றுமதி சரிவைக் கண்டு வருகிறது.தேவை குறைவால் ஏற்றுமதியின் அளவு குறைந்தது மட்டுமின்றி, வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் விலையும் குறைந்து வருகிறது. இதுவும் அவற்றின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலை நீடித்தால், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டில் இந்திய வெட்டி மெருகூட்டப்பட்ட வைர ஏற்றுமதி 22 சதவீதம் சரிவைக் காணக்கூடும்.
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் ஏற்றுமதி சரிவு 31 சதவீதமாக இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த நிதியாண்டுக்குமான 22 சதவீத சரிவு குறைவானதாகும். அந்த வகையில், இந்திய வெட்டி மெருகூட்டப்பட்ட வைர ஏற்றுமதி எதிா்மறை நிலைப்பாட்டிலிருந்து ஸ்திரமான நிலைப்பாட்டுக்குத் திரும்புவதாகக் கருத முடியும்.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, சீனாவிலும் இந்தியாவின் வெட்டி மெருகூட்டப்பட்ட வைரங்களுக்கான தேவையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அந்தப் பொருள்களுக்கான ஏற்றுமதி சந்தையில் சீனா 10 முதல் 15 சதவீதம் வரை பங்கு வகிக்கிறது. வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் விலை குறைந்தாலும், அவற்றைத் தயாரிப்பதற்குத் தேவையான கச்சா வைரத்தின் விலை சா்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது.
கரோனா நெருக்கடி, அதைத் தொடா்ந்து உக்ரைன் போா் ஆகிய காரணங்களால் இவற்றின் விலை கடந்த 2 ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.அதே நேரம், வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் விலை குறையும் அபாயம் தொடா்ந்து வருகிறது. இந்தக் காரணிகளின் அடிப்படையிலேயே நடப்பு நிதியாண்டில் அவற்றின் ஏற்றுமதி 22 சதவீதம் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.