கிறிஸ்துமஸ்

கப்பலைக் கரை சேர்த்த வேளாங்கண்ணி அன்னை

எம்.சங்கர்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் புகழ் உலகளவில் பரவியிருக்க பல காரணங்கள் உண்டு எனினும், முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது புயல் சீற்றத்தில் சிக்கித் தவித்த போர்த்துக்கீசியர்களின் கப்பலைக் கரை சேர்த்த அன்னையின் மகிமை. 

கி.பி 15-ஆம் நூற்றாண்டிலிருந்து 17-ஆம் நூற்றாண்டு வரையிலான காலம், குடியேற்ற நாடுகளின் ஆதிக்கம் மிகுந்திருந்த காலம். அந்தக் காலத்தில், ஏறத்தாழ சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு,  கீழை நாடுகளின் வாணிபத்துக்காக வங்கக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த போர்த்துக்கீசிய பாய்மர கப்பல் ஒன்று, புயல் சீற்றத்தில் தத்தளிக்க நேரிட்டது.

செய்தவறியா நிலைக்கு உள்ளான போர்த்துக்கீசிய மாலுமிகள், அடைக்கலம் கோரி அன்னையை மன்றாடினர். விசுவாசத்துடன், உருக்கம் நிறைந்திருந்த அவர்களின் வேண்டுகோள் அன்னையை எட்டியது. அவர்களுக்கு உதவ திருவுளம் கொண்ட கருணைக் கடலான அன்னையின் அருளால்,  கடல் கொந்தளிப்பும், மழையும், புயலும் கணநேரத்தில் மறைந்தன. மரணத்தின் விளிம்புக்குச் சென்று மீண்ட மாலுமிகள், தங்கள் மரக்கலத்தை விரைவாக கரையை நோக்கி செலுத்தினர்.

தாங்கள் ஆபத்திலிருந்து மீண்ட இடத்துக்கு மேற்கு திசையில் குடிசைகள் இருப்பதைக் கண்ட அவர்கள், ஆர்வத்துடன் அப்பகுதியில் கரை சேர்ந்து, முழந்தாளிட்டு அன்னைக்கு நன்றி செலுத்தினர். தங்களைக் காத்தருளியது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் கருணையே என்பதை அறிய அவர்களுக்கு வெகுநேரம் தேவைப்படவில்லை. உடனடியாக, வேளாங்கண்ணி நடுத்திட்டில், நாகை செல்வந்தர் அமைத்திருந்த புனித ஆரோக்கிய அன்னையின் ஆலயத்தை அடைந்து, அன்னைக்கு நன்றி கூறிப் பணிந்தனர்.

போர்த்துக்கீசிய மாலுமிகள் வேளாங்கண்ணியில் கரைசேர்ந்த நாள் ஆரோக்கிய அன்னையின் பிறப்பு நாள் (செப். 8) என்பதையறிந்து மட்டற்ற மகிழ்ச்சிக்குள்ளான மாலுமிகள், தங்களை ஆபத்திலிருந்து காத்தருளிய கருணையின் உருவான புனித ஆரோக்கிய அன்னையின் ஆலயத்தை விரிவுப்படுத்த களப்பணியைத் தொடங்கினர்.

கூரை வேய்ந்த சிறு கோயிலாக இருந்த நடுத்திட்டு கோயிலை 24 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக, மேற்கத்திய பாணியிலான கட்டுமானத்தில் சிறு மண்டபக் கோயிலாக விரிவாக்கம் செய்தனர். கோயிலின் விரிவாக்கக் கட்டுமானப் பணிகளின் நிறைவில், புனித ஆரோக்கிய அன்னையின் அழகிய திருச்சொரூபத்தை பீடத்தில் ஏற்றினர். அந்த நாளை அவர்கள் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழந்தனர்.

கோயில் விரிவாக்கத்துடன் தங்கள் பணி நிறைவு பெற்றதாகக் கருத மனமில்லாத அந்த மாலுமிகள், மீண்டும், மீண்டும் வேளாங்கண்ணிக்கு வந்து செல்வதையும், ஆலயத்தைப் பொலிவுபடுத்துவதையும் தங்கள் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாகவே கருதி பணிகளைத் தொடர்ந்தனர்.  

சீன தேசத்தின் பீங்கான் ஓடுகளைக் கொண்டு பீடத்தை அலங்கரித்தனர். அந்த பீங்கான் ஓடுகளில், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் நிகழ்ச்சிகளை அழகுறப் பதித்தனர். அந்த பீங்கான் ஓடுகள், வேளாங்கண்ணி பேராலய பசலிக்கா பீடத்தில் இன்றளவும் நிலைபெற்றுள்ளன. போர்த்துக்கீசிய மாலுமிகள் தங்களுக்கு நேரிட்ட அபாயத்தையும், அன்னையின் அருளால் மரணத்தின் விளிம்பிலிருந்து தாங்கள் மீண்டதையும் தங்கள் நாட்டு மக்களிடமும், தாங்கள் வாணிபத்துக்காகப் பயணித்த பிற தேச மக்களிடமும் நன்றிப் பெருக்குடன் போற்றிப் புகழ்ந்தனர். அவர்களின் விசுவாசம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் மகிமையை ஆசிய கண்டத்துக்கு அப்பாலும் பரவச் செய்தது.

தமிழகத்தின் தென்கிழக்குப் பகுதியில் ஓர் சிற்றூராக உள்ள வேளாங்கண்ணியின் புகழ், தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே உலகம் முழுமையும் பரவியிருந்ததற்கு போர்த்துக்கீசிய மாலுமிகளின் நன்றி, விசுவாசம் ஒரு காரணமென்றாலும், வங்கக் கடலோரத்தில் அருளும் தங்கத் தாயின் மகிமையே பிரதான காரணம் என்றால் மிகையாகாது.

இயேசு பிரான் தன் பிறப்பின் நோக்கத்தை அடையும் நேரத்தில், தனது மீட்பின் திட்டத்துக்கு உதவிய தனது தாயை, யோவான் வழியே இதோ உம் தாய் எனச் சுட்டிக்காட்டி, மனித இனத்துக்கு விலை மதிக்க முடியாத தனது இரண்டாம் கொடையாக வழங்கியது முதல், மனித இனத்தின் தாயாக விளங்கி அன்னை மரியா நிகழ்த்திய புதுமைகள் ஏராளம். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகிறது. 

வேளாங்கண்ணியில், மோர்க்கார சிறுவனின் முடத்தை நீக்கி அன்னை அருளிய வரலாறு. வேளாங்கண்ணி அன்னைக்குப் புனித ஆரோக்கிய அன்னை என்ற பெயர் ஏற்படவும்,  வேளாங்கண்ணியில் நடுத்திட்டு கோயில் அமையவும் காரணமாக இருந்த அந்த அற்புத அருள் வரலாறு.

வேளாங்கண்ணியில் அன்னை மரியா, புதுமையின் முதன்மையாக பால்கார சிறுவனுக்குக் காட்சியளித்த நிகழ்வுக்கு சில ஆண்டுகளுக்குப் பின்னர், வேளாங்கண்ணிக்குக் கிடைத்த பெரும் பேறாக அமைந்தது மோர்க்கார சிறுவனின் முடம் நீக்கிய புதுமை நிகழ்வு.

16ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஒரு ஏழை விதவை, பிறவியிலேயே கால் ஊனமுற்ற ஒரு குழந்தையுடன் வேளாங்கண்ணியில் தனிமையில் வசித்து வந்தார். வாழ்வாதாரத்துக்காக, தினமும் மோர் நிறைந்த பானையையும், தன் முடவன் மகனையும் சுமந்து சென்று, வேளாங்கண்ணி நடுத்திட்டு என்ற பகுதியில் இறக்கி வைத்துவிட்டு, மகனை மோர் விற்கச் செய்துவிட்டு, அவர் தன் பிற பணிகளை கவனிக்கச் செல்வது வழக்கம்.

ஒரு நாள், முடவன் மோர் பானையுடன் அமர்ந்திருந்த போது, அந்தப் பக்கம் வழிப்போக்கர்கள் யாரும் வரவில்லை. அதனால், மோர் வாங்குவோர் யாரும் உண்டோ? என வழி மேல் விழி வைத்து காத்திருந்தான் அந்தச் சிறுவன். தன்னால் மற்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லவும் முடியாத ஊன நிலையை நினைத்து, மனம் வருந்தி அமர்ந்திருந்தான்.

அப்போது, திடீரென ஒரு காட்சி அவன் கண் முன் தோன்றியது. பேரொளியும், அழகும்  ததும்பும் குழந்தையுடன், கருணையின் வடிவாக விண்ணகப் பேரரசி ஒருவர் வானிலிருந்து கீழே இறங்குவதை அவன் கண்டான். அந்த விண்ணரசி, என் குழந்தைக்கு சிறிது மோர் தர முடியுமா? என முடவனிடம் பாசத்துடன் வினவ,  பரவசமடைந்த முடவன், பயபக்தியுடன் ஒரு குவளையில் மோரை வழங்கினான். அந்த மோரை தன் மகனுக்குப் புகட்டிய அன்னை, கருணையுடன் தன் திருமகனை நோக்கி, மோர் அளித்த சிறுவனின் ஊனத்தை போக்கக் கோரினார். அன்னையின் வேண்டுகோளை அடுத்த கணமே நிறைவேற்றியது அந்த அருள் குழந்தை. முடவனின் ஊனம் நீங்கியது. இருப்பினும், அவன், தன் ஊனம் நீங்கியதை அறியாமலேயே அமர்ந்திருந்தான்.

அப்போது, நாகையிலிருக்கும் செல்வந்தர் ஒருவரை குறிப்பிட்டு, அவரிடம் சென்று இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டச் சொல்லுமாறு அன்னை, முடவனைப் பணித்தார். இதைக் கேட்ட அந்த முடவன், தன்னால் எழுந்து நடக்க முடியாது என்பதைக் கூற முடியாமல், அன்னையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவனாகவும், அதே நேரத்தில் நடக்க முடியாத தன்னால் எப்படி நாகை செல்ல முடியும்? என்பது குறித்தும் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

முடவனின் மன ஓட்டத்தை அறிந்த அன்னை, எழுந்த நட என அருளினார். அந்த உத்தரவை ஏற்ற மனம், மூளைக்குக் கட்டளையிடும் முன்பாக,  தன்னையறியா நிலையில் அந்த முடவன் முதல் முறையாக எழுந்து நின்றான். தன் வாழ்வில் என்றும் அறிந்திராத ரத்த ஓட்டத்தை தன் கால்களில் உணர்ந்தான். எழுந்து நின்றவனின் கால் முதல் முறையாக நடைப்போட்டது.

அன்னையின் கருணையால் கால் வரப்பெற்று, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த  அந்தச் சிறுவன், கருணையின் திருவுருவாக தன் எதிரே தோன்றிய அன்னையின் பாதம் பணிந்து நன்றி கூற நினைத்து திரும்பினான். அன்னையின் அருள்காட்சி மறைந்தது. அடுத்த கணம், அன்னையின் அருள் கட்டளை அவனை ஆட்கொண்டது. நடந்தே அறியாத அவனது கால்கள், நாகையை நோக்கி ஓடின. கல்லையும், மண்ணையும், நீரையும் துச்சமாகக் கடந்தான், நாகையை அடைந்தான். கருணை வடிவான அன்னை இட்ட கட்டளைப்படி, அந்தச் செல்வந்தரை சந்தித்து, தான் கண்ட புதுமை நிகழ்வை போற்றி விவரித்தான். தன் ஊனம் நீங்கியதை கண்ணீர் மல்க பகிர்ந்தான்.

புதுமை நிகழ்வுக்கு முந்தைய நாள் இரவில், தன் திருமகனுடன் அன்னையின் காட்சியை கனவாகக் கண்டிருந்த அந்த செல்வந்தர், அளவில்லா ஆனந்தம் அடைந்தார்.  அன்னை காட்சியளித்த இடத்தை தானும் உடனடியாக காண விரும்பினார். மோர் விற்ற சிறுவனும், செல்வந்தரும் ஆரோக்கிய அன்னை காட்சியளித்த நடுத்திட்டு பகுதியை அடைந்து, அன்னையை இறைஞ்சி மன்றாடினர். பிறவியிலேயே ஊனமாக பிறந்தவன் ஊனம் நீங்கியிருப்பதையும், செல்வ பெருமகனார் ஒருவர் நடுத்திட்டில் முழந்தாளிட்டு அன்னையை இறைஞ்சி மன்றாடியதையும் கண்டும், அன்னை நிகழ்த்திய புதுமையையும் கேட்டும் ஊர் மக்கள் மட்டமற்ற மகிழ்வில் திளைத்தனர்.

நாகை செல்வந்தர், அந்த ஊர் மக்களின் ஒத்துழைப்புடன், அன்னை காட்சியளித்த நடுத்திட்டு பகுதியில் கோயில் எழுப்பத் தொடங்கினார். மண்ணால் சுவர் எழுப்பி, கூரை வேயப்பட்ட அந்தக் கோயிலில், தான் கனவில் கண்டதைப் போன்றே திருமகனை கையில் ஏந்திய அன்னையின் திருச்சொரூபத்தை கோயில் பீடத்தில் வைத்து வணங்கினார்.

பிறவி முடவனின் ஊனம் போக்கி, அன்னை நிகழ்த்திய புதுமையின் பெருமை திக்கெட்டும் பரவியது. மக்கள் கூட்டம், கூட்டமாக வேளாங்கண்ணி வந்து அன்னையின் அருளை வேண்டி மன்றாடினர். முடவனின் ஊனத்தைப் போக்கிய புதுமையின் காரணமாகவும், தன்னை நாடி வந்தோரின் துயரங்களை, பிணிகளை போக்கியதன் காரணமாகவும், வேளாங்கண்ணி அன்னைக்கு புனித ஆரோக்கிய அன்னை என்ற பெயர் அப்போதே வழங்கலாகி நிலைப்பெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் விண்மீன் கோயிலில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் கூட்டமும் சில நாள்களாக அதிகரித்து வருவதால் வேளாங்கண்ணி நகரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

கீழ்திசை நாடுகளின் லூர்து என்று அழைக்கப்படுகிறது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாக நடைபெறுவதும், இதில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்,வெளிநாட்டைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.

டிசம்பர் 25ஆம் தேதி  கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், குந்தை இயேசு பிறப்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் விண்மீன்ஆலயம், மற்றும் கீழ்கோயில்  மேல்கோயில்களில் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.

தற்போது பேராலயம் மற்றும் வளாகப் பகுதிகளில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விண்மீன் கோயிலினுள் பிரமாண்ட இயேசு கிறிஸ்து  பிறப்புகுடில் அமைக்கும் பணிநடைபெற்று வருகின்றன. இதேபோல் பேராலயம் வளாகப் பகுதிகளும் மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து பேராலய அதிபர் பிரபாகர அடிகளார் கூறியது:  கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் வளாகப்பகுதிகளில் அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. விண்மீன் கோயிலில் டிச.24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி முதல் கிறிஸ்துமஸ் வழிபாடுகள் தொடங்கப்படவுள்ளன. தொடர்ந்து கிறிஸ்துமஸ் விழா நாளான டிசம்பர் 25ஆம் தேதியும் வழக்கம் போல் திருப்பலிகள் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.

இதேபோல், வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் அதிகம் கூடுமிடங்களான ரயில் நிலையம் பேருந்து நிலையம், கடற்கரை பகுதிகளில் சுகாதார வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நிறைந்த சாலைகள், கடற்கரை பகுதிகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதிலமடைந்த நிலையில் காணப்படும் வேளாங்கண்ணி ஆர்ச் முதல் பேருந்து நிலையம் வரையிலான சாலையில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்துக்கு நெரிசல்  ஏற்படாத வகையில் வாகன நிறுத்துமிடங்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சில நாட்களாக அதிகரித்து வருதால் வேளாங்கண்ணி  விழாக்கோலம் பூண்டுள்ளது.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணிக்கு டிசம்பர் 23, 24 மற்றும் 25ஆம் நாள்களிலும் லட்சக்கணக்கானப் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  செ. செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில்  கூடுல் போலீஸார் பாதுகாப்பு  பணிகளில்  ஈடுபடவுள்ளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையா் ஆய்வு

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT