செய்திகள்

விஜய் வீட்டில் விடிய விடிய சோதனை

DIN


நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறையினர் நேற்று (புதன்கிழமை) சோதனை செய்தனர். இதில் இரு திரைப்பட நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை தேனாம்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு பிரபல ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்மெண்ட் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் தயாரித்து நடிகர் விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது.

இந்நிலையில் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமானவரித் துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அந்தப் புகார்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் முதல்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வருமானவரித்துறையினா், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சுமாா் 20 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனை, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி அகோரம், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் வசிக்கும் தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், நாவலூர், தியாகராய நகர், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகள் உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற்றது.

இந்தச் சோதனையில் பிகில் திரைப்படத்துக்கு மதுரையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன் நிதியுதவி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அன்புச்செழியனுக்கு சொந்தமான தியாகராய நகரில் உள்ள கோபுரம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம், அவரது வீடு, மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர்.

இரு இடங்களிலும் நடைபெற்றச் சோதனையில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் கடைசியாக தயாரித்த பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பணத்துக்கு முறையாக வரி செலுத்தப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டர்’ திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த விஜய்யிடம் வருமானவரித் துறையினர் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் வருமானவரித் துறையினருக்கு திருப்தி ஏற்படாததால், அவரை சென்னைக்கு காரில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதேவேளையில் சென்னை சாலிகிராமம், கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய இடங்களில் உள்ள விஜய்யின் பங்களாக்களில் வருமானவரித் துறையினர் நண்பகல் முதல் சோதனை செய்தனர். விஜய்யின் சாலிகிராமம் பங்களாவில் சோதனை நடைபெறுவதை அறிந்து, அவர் வீட்டின் முன் அவருடைய ரசிகர்கள் குவிந்தனர்.

இதையடுத்து, இரவு 8 மணியளவில் பனையூர் மூன்றாவது அவென்யூவில் உள்ள அவரது பங்களாவுக்கு விஜய்யை வருமானவரித் துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர். அவரிடம் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்றதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் பனையூர் பங்களாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவரது வீட்டில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதேபோல் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும், அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களிலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, வருமானவரித் துறை சோதனை மொத்தம் 35 இடங்களில் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இதில் ஏ.ஜி.எஸ். திரைப்பட நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும், அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களிலும் இருந்து கணக்கில் வராத ரூ.24 கோடி பணமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறையினர் தெரிவித்தனர். அதேவேளையில் வருமானத்தை மறைத்து முறையாக வரி செலுத்தாமல் வாங்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களையும் கைப்பற்றியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம், ஆவணங்கள் குறித்த முழுத் தகவல்களையும், வரி ஏய்ப்பு குறித்த தகவல்களையும் தெரிவிக்க முடியும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT