செய்திகள்

சொந்த ஊருக்குச் செல்ல விருப்பப்படும் சென்னை மக்களை அனுப்பி வையுங்கள்: முதல்வருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை

DIN

சென்னையில் வாழும் நோய்த்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்குப் பத்திரமாகச் சோதனை செய்து அனுப்பிவைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை வைத்துள்ளார்

கரோனா நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு கடந்த மாா்ச் 24-ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னா் பொது முடக்கம் மீண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதியும், மே 4-ஆம் தேதியும், மே 17-ஆம் தேதியும் பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஐந்தாவது முறையாக ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

பொது முடக்கம் 5 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், முதல் இருமுறையும் எவ்வித தளா்வுகளும் இன்றி கடுமையான அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னா் படிப்படியாக தளா்வுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தளா்வுடன் அமல்படுத்தப்பட்ட பின்னா், பெரும்பாலான மக்கள், சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலை பின்பற்றாமல் சா்வ சாதாரணமாக வெளியே வருவதாக புகாா் எழுந்தது. முகக் கவசம் அணியாமல் பொதுஇடங்களுக்குச் செல்வது, சமூக இடைவெளிப் பின்பற்றாமல் இருப்பது போன்ற மீறல்களிலும் பொதுமக்கள் ஈடுபட்டனா்.

இதன் விளைவாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், காஞ்சிபுரம்,திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில பகுதிகளிலும் ஜூன் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 12 நாள்கள் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தபோவதாக தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் தமிழக முதல்வருக்கு இயக்குநர் சேரன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். ட்விட்டரில் அவர் எழுதியிருப்பதாவது:

அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் பயமும் கரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கிக் கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம்.

15 நாட்களில் முடிந்துவிடும் என நினைத்து சொந்த ஊருக்குப் போகாமல் தங்கியவர்கள் நிறைய. இப்போது போக நினைக்கிறார்கள். சுகாதாரமாக இருக்கும் அவர்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வெளியிலிருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கும் அதன் மூலம் பரவும் அபாயம் இருக்கிறது.

எனவே, சென்னையில் கரோனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்த வழி சென்னையில் வாழும் நோய்த்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்குப் பத்திரமாகச் சோதனை செய்து அனுப்பிவைப்பதே ஆகும். அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களைக் கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.

மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்களை உயிரோடு வைத்துக்கொள்ள அவர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல நினைக்கிறார்கள்.. அது நியாயமும் கூட.. அதற்காக முறையே யோசித்துச் செயலாற்ற வேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலாய் லாமாவை சந்தித்த கங்கனா!

வெயிலின் தாக்கம் 2 நாள்களுக்கு அதிகரிக்கும்: வானிலை

சலவையாளர்களின் தேய்ந்து போன ரேகைகள்: இப்படி ஒரு பிரச்னையா?

தி.மு.க வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

சைரன் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT