மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்தார். எனினும் இப்படத்திலிருந்து முருகதாஸ் வெளியேறியதால் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.
விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் பாலிவுட் பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனிடமும் வில்லன் வேடத்தில் நடிக்க ஜான் ஆபிரஹாமிடமும் படக்குழு பேசிவருவதாகத் தெரிகிறது. மேலும் விஜய் 65 எனத் தற்போதைக்கு அழைக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றவுள்ளதாகவும் அறியப்படுகிறது. விஜய் நடித்த நண்பன் படத்துக்கு மனோஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.