தமிழகத்திலிருந்து பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (திங்கள்கிழமை) பத்ம ஸ்ரீ விருது வழங்கினார்.
நாட்டின் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. நிகழாண்டு மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 4 பத்ம விபூஷண் விருதுகளும், 17 பத்ம பூஷண் விருதுகளும், 107 பத்மஸ்ரீ விருதுகளும் அடங்கும். முதல்கட்டமாக 54 பேருக்கு கடந்த திங்கள்கிழமை பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்திலிருந்து கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், திருச்சி விராலிமலையைச் சேர்ந்த சதிர் நடனக் கலைஞர் முத்துகண்ணம்மாள், திருச்சியைச் சேர்ந்த கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி. நடராஜன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டாம் பகுதியாக பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகத்திலிருந்து நடிகை சௌகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவித்தார். அவரைத் தொடர்ந்து மருத்துவர் வீராசாமி சேஷய்யாவுக்கும் குடியரசுத் தலைவர் பத்ம ஸ்ரீ விருது வழங்கினார்.