ஸ்பெஷல்

தோழா வெளிவந்து 5 வருடங்கள்: மூழ்காத நட்பு!

ச. ந. கண்ணன்

காதலும் இருக்கவேண்டும், நட்பும் இருக்கவேண்டும், அந்த நட்பும் நடுவில் பிரிந்துவிடவேண்டும், நகைச்சுவை, குதூகலம் எல்லாம் வேண்டும், அதேசமயம் உருகவைக்கும் காட்சிகளும் இருக்கவேண்டும்...

இது அத்தனையும் ஒரு படத்தில் இருக்கமுடியுமா? முடியும் என நிரூபித்த படம் - தோழா. நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் வம்சி இயக்கிய படம், 2016 மார்ச் 25 அன்று தமிழ், தெலுங்கில் வெளியானது.

இந்தப் படம் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் அதை மீண்டும் மீண்டும் பார்க்க ரசிகர்கள் தயாராக இருப்பார்கள். உடனே சமூகவலைத்தளங்களில் ஒரு பேச்சு உருவாகும். தோழாவுக்கு எப்போதும் எந்நேரமும் படத்தைப் பாராட்டிப் பேச ரசிகர்கள் இருப்பார்கள்.

தொழிலதிபர் நாகார்ஜுனாவுக்கு ஒரு விபத்தில் கழுத்துக்குக் கீழே எல்லாப் பாகங்களும் செயலிழந்து போகின்றன. இதனால் சக்கர நாற்காலியில் முடங்கிப் போகிறார். சிறையில் இருந்து பரோலில் வரும் கார்த்தி, நாகார்ஜுனாவைப் பார்த்துக்கொள்ளும் பணியில் சேர்கிறார். இப்படிப்பட்ட சூழலில் முதலாளி - தொழிலாளி இடையே உருவாகும் நட்பு தான் தோழா. தி இன்டச்சபிள்ஸ் என்கிற பிரெஞ்சு படத்தின் தமிழ் - தெலுங்கு ரீமேக்.

எல்லோரும் நாகார்ஜுனாவைக் கவனிப்பது போல பார்த்துப் பார்த்துக் கவனிப்பதில்லை கார்த்தி. தன் ஜிகிரி தோஸ்து போல முதலாளியை அவர் அசால்டாகக் கையாள்வதுதான் நாகார்ஜுனாவை வெகுவாக ஈர்க்கிறது. வலிகளை மறக்கடிக்கிறது. பதிலுக்கு, தன் குடும்பத்தினர் தன்னைச் சரியாகப் புரிந்துகொள்வதில்லை என்று ஏக்கத்தில் இருக்கும் கார்த்திக்கு உடன்பிறவா அண்ணனாக உதவுகிறார் நாகார்ஜுனா. இப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வது தான் படம் பார்க்கும்போது நம்மைப் படத்துடன் ஒன்றிணைய வைத்துவிடுகிறது. வாழ்க்கைக்குப் பணத்தை விடவும் நல்ல நட்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் படம் இது.

விரக்தி நிலையில் சென்றுவிடும் நாகார்ஜுனாவை அவருக்குப் பிடித்தமான பாரிஸுக்கு கார்த்தி அழைத்துச் செல்வது படத்தின் சுவாரசியத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது. மனத்துக்குப் பிடித்தமானதைச் செய்தால் எந்த நோயின் வலியிலிருந்தும் விடுபடலாம் என்பதைச் சொல்லும் காட்சிகள் அவை. நாகார்ஜுனாவின் நிலைமையினால் படத்தில் சீரியஸான காட்சிகள் இருக்கக்கூடாது என்பதில் இயக்குநர் வம்சி ஜாக்கிரத்தையாக இருந்திருக்கிறார். கார்த்தி - பிரகாஷ் ராஜ் இடையிலான பெயிண்டிங் காட்சியை எப்போது நினைத்தாலும் சிரித்துவிடமுடியும். கார்த்தி தங்கையின் திருமணத்தில் உள்ள பிரச்னையைப் படுத்தபடுக்கையாக இருந்த நிலையிலேயே சரிசெய்கிறார் நாகார்ஜூனா. அழகான பில்ட்-அப் காட்சி என்பது மட்டுமல்லாமல் நாகார்ஜுனா - கார்த்தி நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் காட்சியும் அதுதான்.

படம் முழுக்க சக்கர நாற்காலியிலும் (ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பட்டது) படுக்கையிலுமே இருக்கவேண்டிய நிலைமை நாகார்ஜுனாவுக்கு. வயது ஆக ஆக அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்கிற அவருடைய விருப்பமே இப்படத்தில் நடிக்கவைத்துள்ளது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு அமலா சம்மதம் அளிக்கவில்லை. இயக்குநர் கதையை எடுத்துக்கொண்டு வரும்முன்பே படத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டிருந்ததால் அதில் நிச்சயம் நடிக்கவேண்டும் என முடிவெடுத்தார் நாகார்ஜுனா. 

படப்பிடிப்பில் நாகார்ஜுனா கை, காலை அசைத்துவிடக்கூடாது என்பதற்காகவே அதைக் கவனிக்க ஓர் உதவி இயக்குநர் நியமிக்கப்பட்டிருந்தார். சோகமான காட்சிகளின்போது நாகார்ஜுனாவின் கை, கால்கள் கட்டப்பட்ட பிறகே காட்சிகளைப் படமாக்கியுள்ளார்கள். ரட்சகன், பயணம், தோழா என நாகார்ஜுனா நடிக்கும் தமிழ்ப் படங்கள் ஏதோவொரு விதத்தில் முக்கியமான படங்களாக உள்ளன. இவர் தமிழில் அதிகப் படங்கள் நடித்திருக்கலாம் என்கிற ஏக்கம் தோழாவைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.

நிறைய தோல்விப் படங்களைக் கொடுத்து மெட்ராஸில் நடித்தார் கார்த்தி. பிறகு கொம்பன் வெளிவந்தது. அடுத்தது தோழா. துறுதுறுவென இருக்கும் உதவியாளர் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருந்தினார் கார்த்தி. படத்தில் தமன்னா தேவையில்லையென்றாலும் (இவருக்கு முன்பு ஷ்ருதி தேர்வானார். தேதி காரணமாக விலக, பிரச்னை நீதிமன்றம் வரைக்கும் சென்றது) வெகுஜனப் படத்தில் கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல் இருந்துவிட முடியுமா, அதுவும் இரு மொழிகளில் எடுக்கும் படத்தில்?   

ஒரே ஒரு செகண்ட்ல என் லைஃப் வெறும் ஞாபகமா மாறிடுச்சு’, `மனுஷன் போற இடத்துக்கு எல்லாம் மனசு போகாது’ அவனுக்கு ஈவு இரக்கமே இல்லடா...’  ‘எல்லாரும் என்னை இரக்கமா பார்க்கறதுதான் பிடிக்கல. அதுனால இவன்தான் என்னைப் பார்த்துக்க சரியான ஆள்...’ என உணர்வுபூர்வமான வசனங்களினால் ஈர்க்கிறார்கள் ராஜு முருகன் - முருகேஷ் பாபு.

வசதி வாய்ப்புகளில் வெவ்வேறு நிலையில் இருக்கும் இருவருடைய நட்பு என்பது நம் சினிமாக்களில் அரிதாகவே இடம்பெறும். அப்படி உருவான படமும் மனத்தைக் கொள்ளைக் கொள்ளும்படி அமைந்ததால் தான் தோழாவை ரசிகர்களால் இன்னமும் மறக்கமுடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

SCROLL FOR NEXT