நடுப்பக்கக் கட்டுரைகள்

எதிர்ப்புகளை உரமாக்கிக் கொள்ளும் சனாதனம்!

கோதை ஜோதிலட்சுமி

 ஹிந்து மதம் என்ற பெயர் சமீபத்திய ஒன்றுதான் என்றாலும், பாரத சமூகத்தைப் பொறுத்தவரை நாம் மதம் என்ற குறுகிய எல்லையை வரையறுத்துக் கொள்வதில்லை. நாம் மதம் அற்றவர்கள். மதம் என்பதற்கான கோட்பாடுகள், விதிமுறைகள் நமக்குக் கற்றுக் கொடுக்கப்படவில்லை. மாறாக, தனிமனித அறம் போதிக்கப்பட்டிருக்கிறது.
 வாழ்வியலுக்கான அறம் அல்லது தர்மம் என்பதையே நாம் தொன்று தொட்டு பழகி வந்திருக்கிறோம். இந்த தர்மமும் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. எந்தக் கோட்பாட்டையும் விதிகளையும் பின்பற்ற எவ்வித நிர்ப்பந்தமும் யாருக்கும் இல்லை.
 ஒவ்வொரு தனி மனிதருக்கும் அவரவர் விருப்பம், சுதந்திரம் இருக்கிறது. இதனால் இந்த தர்மத்தின் எல்லைகள் விரிவாகி அண்டம் முழுமையையும் மனித சமூகத்தின் அனைத்து உயிர்களையும் தனக்குள் அரவணைத்துக் கொள்வதற்கான வெளியைப் பெற்றிருக்கிறது. தனிமனித உணர்வுகளை, நியாயங்களை மதித்து நடத்தல், தனிமனித ஒழுக்கம் இந்த தர்மத்தின் தனிசிறப்பு.
 சனாதன தர்மம் இறைவனை எந்த வடிவிலும் வழிபட இடமளிக்கிறது. எத்தனை கோடி மனிதர்கள் உண்டோ அத்தனை கோடி தெய்வங்களும் சாத்தியம் என்ற பரந்த சிந்தனை இந்த தர்மத்தின் ஆணிவேர். இதையே விவேகானந்தர், "எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை சமயங்கள் சாத்தியம் என்னும் அளவுக்கு ஹிந்து தர்மம் விரிவடையும் தன்மை கொண்டது' என்று எடுத்துரைக்கிறார்.
 திருமூலரோ, "அந்தமில்லானுக் ககலிடந்தான் இல்லை, அந்தமில்லானை அளப்பவர்தாமில்லை, அந்தமில்லானுக்கு அடுத்தசொல்தான் இல்லை, அந்தமில்லானை அறிந்துகொள்பத்தே' அதாவது, இறைவனை இதுதான் என்று சொல்லிவிட முடியாது, இவ்வளவுதான் என்று அளந்து விட முடியாது, வார்த்தைகளால் முழுவதுமாய் விளக்கிவிட முடியாது அவனை உணரத்தான் முடியும் என்கிறார்.
 கம்பரோ, "ஒன்றே என்னின் ஒன்றே ஆம்; பல என்று உரைக்கின் பலவே ஆம்; அன்றே என்னின் அன்றே ஆம்; ஆமே என்னின் ஆமே ஆம்; இன்றே என்னின் இன்றே ஆம்; உளது என்று உரைக்கின் உளதே ஆம்; நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பம்மா' என்று இன்னும் இக்கருத்தை எளிதாக்கி விரிவுபடுத்துகிறார்.
 தர்மம் என்பது கடமை, சுதந்திரம், பொறுப்பு இவற்றின் கூட்டுசேர்க்கை அல்லது இவை சந்திக்கும் மையம். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய மானுட சமூகத்திற்குத் தேவையான எப்பொழுதும் நிலைத்திருக்கும் வாழ்வியல் கோட்பாடுகளை இந்த தர்மம் நமக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் இது சனாதன தர்மம்.
 மானுட வாழ்வை கடைத்தேற்றுவதற்கான வழிமுறை தேடல் தொடர்பானது. மனிதன் தன் மனத்தில் இருக்கும் புதிர்களுக்கு விடை தேடுவதற்கான வெளியை அது வழங்குகிறது. இறுக்கமான விதிமுறைகள் ஏதுமற்று நிற்கிறது. இறை நம்பிக்கையோ நம்பிக்கையின்மையோ தத்துவத் தேடலோ துறவுநிலையோ சரணாகதியோ எல்லாமும் சாத்தியம். எல்லா சித்தாந்தங்களுக்கும் நடைமுறைகளுக்கும் சமமான சிறப்பான இடம் உண்டு.
 "ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி என்றும் திகழும் குன்றா ஒளியே' என பிரபஞ்ச மெய்ப்பொருளைக் கண்டுகொண்டதாலும் ஒன்றைப் புதிதாக ஆக்குவதோ அழிப்பதோ சாத்தியமில்லை. இயற்கையின் போக்கில் ஒன்று மற்றொன்றாய் மாற்றம் பெறுவது மட்டுமே சாத்தியம் என்ற பேருண்மையை உணர்ந்து கொண்டதாலும் பிரபஞ்ச இயக்கத்தின் போக்கில் இருக்கும் ஒரு தர்மம், தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் உயிர்ப்பித்துக் கொள்ளவும் கூடிய ஆற்றலைப் பெற்றுவிடுகிறது.
 "சனாதன தர்மமே நம் தேசியம். இந்து தேசம் சனாதன தர்மத்துடனே பிறந்தது. அதனாலேயே இயங்குகிறது. அதன் ஊடாகவே வளர்கிறது. சனாதன தர்மம் வீழுமானால் ஆதியும் அந்தமும் அற்ற சனாதன தர்மத்திற்கு அழிவு என்பது சாத்தியமென்றால் இந்த தேசமும் அதனுடன் அழியும். ஆகவே, சனாதன தர்மமே நம் தேசியம்" என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறார்.
 இதனால்தானோ என்னவோ, சனாதன தர்மத்தின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்த வண்ணமே இருந்திருக்கின்றன. அந்நியப் படையெடுப்புகள் மட்டுமல்லாது கோட்பாட்டு ரீதியிலான தாக்குதல்களும் நிகழ்ந்திருக்கின்றன. புதிய சமயங்கள் தோன்றி சனாதனத்தை இல்லாமல் செய்து விடுவதற்கான முயற்சிகளும் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பெளத்தமும் சமணமும் இதிலே பெரும்பங்காற்றியிருக்கின்றன.
 இந்த தர்மத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்துவிட்டோம் என்று அவர்கள் கருதும் சமயத்தில் வேறோர் இடத்திலிருந்து இந்த தர்மம் துளிர்த்து துரிதமாய் துலக்கமாய் வளரத் தொடங்கியதை வரலாறு சொல்கிறது. சனாதனத்திற்கு எதிராகத் தோன்றிய பிற சமயங்கள் தோன்றிய வேகத்தில் அழிந்து போயிருக்கின்றன அல்லது தங்கள் அடையாளத்தை இழந்து சனாதனத்துள் ஒடுங்கிப் போயிருக்கின்றன.
 இந்த முயற்சிகள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன; இன்றும் தொடர்கின்றன. சனாதன தர்மத்தின் மீதான வெறுப்பும் காழ்ப்புணர்வும் தூண்டப்படுகின்றன. மதம் என்னும் அரசியலும், அரசியல் என்ற மதமும் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்கள் கணக்கிலடங்கா.
 சனாதன ஒழிப்பு மாநாடுகள் இந்த மண்ணில் நடத்தப்படுகின்றன. "சனாதனத்தை வேரறுப்போம்' என்ற சூளுரை உரக்க ஒலிக்கிறது. இதையும் அவர்களின் உரிமை என்றே சனாதன தர்மம் வேடிக்கை பார்க்கிறது; புன்னகையோடு கடந்து போகிறது. சனாதனிகள் மீது வீசப்படும் வசைச்சொற்கள் காற்றில் கரைகின்றன. சனாதன தர்மம் சகல எதிர்ப்புகளையும் உரமென ஏற்றுக் கொள்கிறது.
 இது ஒருபுறமிருக்க, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த தர்மம் காட்டும் ஞானப் பாதையை நோக்கி வந்தவர்களும் உண்டு. நம் தேசத்திலிருந்து உலகெங்கும் பரவி வாழ்வோர் தங்கள் நம்பிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தலால் இந்த தர்மம் உலகம் முழுமையும் நிறைந்திருக்கிறது.
 பல நாடுகளின் அறிஞர்களும் ஆன்ம தேடல் உள்ளவர்களும் தொடர்ந்து நம் தேசத்தை நோக்கி வருவதற்கும், இந்த தேசத்து குருமார்களை தங்கள் நாடுகளில் ஏற்றுக் கொள்வதற்கும் வாழ்க்கை பற்றிய காரணங்களை அறிதலும் "நான் யார்?' என்பதற்கான விடை தேடலுமே காரணங்கள்.
 தற்பொழுது, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்துக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அங்கு ஹிந்துக்களின் பண்டிகைகள் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகின்றன. நவராத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி என பண்டிகைகள் நிறைந்த அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாட டெக்சாஸ், ஃபுளோரிடா, நியூ ஜெர்ஸி, ஒஹையோ, மாசசூசெட்ஸ் உள்ளிட்ட அமெரிக்க மாகாணங்கள் தீர்மானம் இயற்றியுள்ளன.
 டெக்சாஸ் மாகாணத்தின் தீர்மானம், "நம்பிக்கை, சேவை, கொள்கைப் பகிர்வு உள்ளிட்டவற்றின் ஒளிவிளக்காக ஹிந்துக்கள் திகழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் ஹிந்து நம்பிக்கைகளை கோடிக்கணக்கானோர் கடைப்பிடித்து வருகின்றனர். ஹிந்துத்துவமானது தனது தனிப்பட்ட கலாசாரம், வரலாறு காரணமாக மாகாணத்துக்கும் அமெரிக்க நாட்டுக்கும் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது' என்று பெருமைப்படுத்துகிறது. ஓரிடத்தில் வெட்ட மற்றோர் இடத்தில் துளிர்க்கும் என்ற இயற்கை நியதி கண்முன் மெய்ப்படுவதைக் காண முடிகிறது.
 ஹிந்துமதத்தின் கலாசாரமும் பாரம்பரியமும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமையானவை. அத்தகைய பாரம்பரியத்தை உலக நாடுகளுடனும் வருங்காலத் தலைமுறையினருடனும் பகிர்ந்து கொள்வது நம் கடமை என்று உலக அமெரிக்க ஹிந்து கவுன்சில் அதற்கான கொண்டாட்டங்களை முன்னெடுத்தது.
 அக்டோபர் மாதம் முழுவதும் கலாசார நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், மாநாடுகள், ஆடை அலங்கார நிகழ்ச்சிகள் என அமெரிக்காவில் நம்முடைய சனாதனத்தின் பெருமை வண்ணமயமாக வெளிப்பட்டது. இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் மக்கள் காட்டிய உற்சாகமும் அதனை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டு பாராட்டிய பாங்கும் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தன.
 கனடா நாட்டின் ஒண்டாரியோவில் நவம்பர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அம்பிகையை முன்னிறுத்தி அவர்கள் மேற்கொள்ளும் கொண்டாட்டங்கள் நம்முடைய சனாதனம் பெண்மையைப் போற்றுவதை உலகிற்கு எடுத்துச் சொல்கின்றன.
 சனாதன தர்மம் பேணப்படுவதும் பெருமைப்படுத்தப்படுவதும் தொடர்கதையாகி இருக்கின்றன. "எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும்' என்ற மகாகவி பாரதியின் கனவு மெய்ப்பட்டு வருகிறது.
 காற்றைப்போல, வடிவம் ஏதுமற்று ஆனால் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாததாய் இயங்கும் தர்மத்தை எதைக் கொண்டு வேரறுப்பது? எதிலும் நீக்கமற வியாபித்திருக்கும் சத்திய ஒளியை எத்தனை கைகளால் மறைத்தாலும் மறைத்தல் கூடுமா?
 இதுதான் தீர்வு என்று வரையறை செய்து கொள்ளாததும், இதுவே தெய்வம் என்று குறிப்பிட்டுக் காட்டாததும், நம்முடைய பிரார்த்தனைகளுக்கு விதிமுறைகள் வகுக்காததும், எந்த வாக்குறுதியும் தந்து மக்களை ஈர்க்காததுமான ஒரு தர்மம், மனித மனத்தின் தேடலுக்கு ஒளி மட்டுமே பாய்ச்சும் தர்மம், சித்தாந்தங்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இடமளித்து அதன் வழியே தன்னையே போஷித்துக் கொள்ளும் தர்மம், ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணங்களுக்கும் இடமளிக்கும் தர்மம் இந்த பூமியில் மானுடத்தின் கடைசி ஜீவன் வாழும் வரை வாழ்ந்திருக்கும்.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

சென்னையில் நாளை ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

என் ஐயே, மை கோல்டே - பிழையற்ற தமிழ் அறிவோம்! - 60

கொள்ளிட ஆற்றங் கரையோரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

SCROLL FOR NEXT